தலையங்கம்: முதுகெலும்புக்கு மோசம்!

அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பால் ட்ரம்ப்பின் தன்னிச்சையான வரி விதிப்பு அதிகாரம் முடங்கியுள்ளது. எனினும், அவரது உலகளாவிய வரி அறிவிப்பால் இந்திய விவசாயம் மற்றும் உள்நாட்டுச் சந்தை பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

Feb 24, 2026 - 11:44
0 544
தலையங்கம்: முதுகெலும்புக்கு மோசம்!
தலையங்கம்

'தன் பேச்சைக் கேட்காத நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் வரும் பொருட்களுக்கெல்லாம் தன்னிஷ்டத்துக்கு வரி விதித்து உலகை மிரட்டினார், டொனால்டு ட்ரம்ப். அவரையே மிரட்டியிருக்கிறது அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம்.

இம்மாதம் 20-ம் தேதி வழங்கிய தீர்ப்பில், 'ட்ரம்ப் அவசர அதிகாரச் சட்டத்தின் கீழ் விதித்த இறக்குமதி வரிகள் செல்லாது' என அறிவித்திருக்கிறது நீதிமன்றம். 'வரி விதிக்கும் அதிகாரம் காங்கிரஸுக்கே என்பது அமெரிக்க அரசமைப்பின் அடிப்படை: அதை நிர்வாகம் தனிப்பட்ட முறையில் பயன்படுத்த முடியாது' என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இதனை, ஜனநாயக அமைப்பில் நீதித்துறையின் தன்னாட்சியை உறுதிப்படுத்தும் தீர்ப்பாக உலகம் பார்க்கிறது.

ஆனாலும் அடங்கிவிடவில்லை அய்யா ட்ரம்ப். தீர்ப்பை கடுமையாக விமர்சித்ததோடு மட்டுமின்றி. புதிதாக 10% உலகளாவிய வரியை அறிவித்து, பூச்சாண்டி காட்டியிருக்கிறார்.

அமெரிக்க அரசியலில் ஏற்பட்டிருக்கும் இந்த அழுத்தம் இந்தியாவை எந்த அளவில் பாதிக்கும் என்பதை கவனத்துடன் பார்க்க வேண்டியிருக்கிறது. ட்ரம்ப்பின் மிரட்டலுக்குப் பணிந்து சில வாரங்களுக்கு முன்பு இந்தியா செய்துகொண்டதாகக் குற்றம்சாட்டப்படும் ஒப்பந்தங்களால் நமக்கு என்ன பாதிப்புகள் ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் மானிய ஆதரவுடன் விளைவிக்கப்பட்ட ஆப்பிள், பாதாம், சோயாபீன்ஸ் போன்ற விவசாயப் பொருட்கள் இந்தியச் சந்தையில் பெருமளவு நுழைய வாய்ப்பு உருவாகியுள்ளது. ஏற்கெனவே செலவினச் சுமையால் சிரமப்படும் இந்திய விவசாயிகளின் நிலை மோசமடையும்.

எரிசக்தி கொள்கையில் செய்துகொண்டிருக்கும் மாற்றங்கள் ஆக்கப்பூர்வமானதாக இல்லை. சர்வதேச அரசியல் சமநிலையைப் பேணுவதாகக் கூறிக்கொண்டு இந்தியா எடுத்திருக்கும் முடிவுகள், உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் சந்தைகளையும் பாதிக்கக்கூடும்.

மொத்தத்தில், அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பு ஜனநாயக வெற்றி என்றாலும், ட்ரம்ப்பின் அழிச்சாட்டிய அலைவீச்சு இந்திய வயல்வெளிகளையும் எட்டியுள்ளது. இந்தியாவின் முதுகெலும்பு என்று போற்றப்படும் விவசாயம் பாதிக்கப்படாத வகையிலான சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டியது அவசியம். இந்தியா தனது நலன்களை உறுதியாகக் காக்க வேண்டிய தருணம் இது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User