கரண்ட் கட்.. ஷாக் ஆகும் விவசாயிகள்.. குடிநீர் விநியோகத்திலும் குளறுபடி.. எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

May 06, 2024 - 17:02
0 288
கரண்ட் கட்.. ஷாக் ஆகும் விவசாயிகள்.. குடிநீர் விநியோகத்திலும் குளறுபடி.. எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்காததால் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தற்போது விவசாயத்திற்கு 24 மணி நேரம் வழங்க வேண்டிய மும்முனை மின்சாரத்தை, திமுக அரசு 8 மணி நேரம் மட்டுமே வழங்கி வருகிறது. அதுவும் தொடர்ச்சியாக வழங்காமல், முறை வைத்து வழங்கப்படுகிறது. அதிலும், பல நேரங்களில் "லோ வோல்டேஜ்" மின்சாரம் வழங்கப்படுவதால், விவசாய மின்மோட்டார்கள் பழுதடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் கண்முன்னே பயிர்கள் கருகுவதைக் கண்டு கண்ணீர் வடிக்கின்றனர். 

திமுக அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கிற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி இருந்தால், நீர்நிலைகளில் மழைநீர் தேங்கி, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது. இந்த கோடையில் தாய்மார்கள் குடிநீருக்காக வெகுதூரம் செல்லவேண்டிய அவலம் ஏற்பட்டிருக்காது-

தற்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீர் திட்டங்களுக்கான மின்மோட்டார்கள் இயங்குவது 20 மணி நேரத்தில் இருந்து 14 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதால், மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். குடிநீர் தேவை கூடுதலாக தேவைப்படும் இந்த கோடை காலத்தில், மின் மோட்டார்களை 22 மணி நேரமாக இயக்கி பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர்த் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இந்த விஷயத்தில் திமுக அரசு அலட்சியம் காட்டாமல், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தடையின்றி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும்" என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User