யானை வழித்தடமாக எங்கள் நிலப்பகுதிகளை அறிவிப்பதா? விவசாயிகள் போராட்டம்.. எங்கள் நிலங்களை பறிக்க வனத்துறை சதி செய்கிறது...

தங்களது இருப்பிடங்களை புதிய யானை வழித்தடம் என தமிழ்நாடு அரசு அடையாளம் கண்டுள்ளதாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை தொண்டாமுத்தூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

May 06, 2024 - 17:51
0 218
யானை வழித்தடமாக எங்கள் நிலப்பகுதிகளை அறிவிப்பதா? விவசாயிகள் போராட்டம்.. எங்கள் நிலங்களை பறிக்க வனத்துறை சதி செய்கிறது...

கோவை தொண்டாமுத்தூர் அருகே பேரூர் பட்டீஸ்வரர் கோயில் முன்பு, விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், தமிழ்நாடு வனத்துறை சார்பில், யானை வழித்தடங்களாக 42 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ள செய்தியை சுட்டிக்காட்டினர். அதோடு "தமிழக வனத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட வரைவு அறிக்கையை படித்து பார்த்ததாகவும், அதில் கோவையில் மட்டும் 4 புதிய யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினர். மேலும், தங்களுடைய விவசாய நிலங்கள், வீடுகள், கோயில்கள் இருக்கும் பகுதியும் ஒரு யானை வழித்தடமாக குறிப்பிடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும், "மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆய்வை தமிழக வனத்துறை மேற்கொண்டபோது, எங்கள் பகுதி விவசாயிகள் ஒருவரிடம் கூட இது குறித்து கலந்து ஆலோசிக்கவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் ஒரு கருத்து கேட்பு கூட்டமும் நடத்தவில்லை. இதற்கு மாறாக, எங்கள் பகுதி நிலப்பரப்பையும், சுற்றுச்சூழலையையும் முழுமையாக அறியாத நபர்களைக் கொண்டு, ஒரு தலைபட்சமாக இந்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்துவரும் பகுதிகளை அந்த குழுவினர் யானை வழித்தடமாக பரிந்துரைத்திருப்பது வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. அதுமட்டுமின்றி, இல்லாத யானை வழித்தடத்தை புதிதாக கண்டறிந்து, அதை விரிவுப்படுத்த 450 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும் எனவும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்." எனக் கூறினர்.

அதோடு, "எங்களுடைய பெற்றோரும், முன்னோர்களும் பல தலைமுறைகளாக இங்கு விவசாயம் செய்து வருகின்றனர். அதன்படி, எங்கள் பகுதியில் யானைகள் இடம்பெயர்வதை நாங்கள் இதுவரை பார்த்ததும் இல்லை. யானைகளின் பெயரைக் கூறி, எங்களிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச விவசாய நிலங்களையும் பறிப்பதற்கு வனத்துறை திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து காலம் காலமாக விவசாயம் நடைபெற்று வரும் பகுதிகளை, யானை வழித்தடம் என பரிந்துரைத்திருப்பதை நாங்கள் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். யானைகளின் பெயரை பயன்படுத்தி எங்கள் நிலங்களை பறித்து, எங்களை இடம்பெயர வைக்க திட்டமிடுவது, மனித உரிமைகளை மீறும் செயலாகும்." என தெரிவித்துள்ளார்.

"எவ்வித முறையான களஆய்வும், உள்ளூர் மக்களின் கலந்தாலோசனையும் இன்றி, தன்னிச்சையாக தயாரிக்கப்பட்டுள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் - மருதமலை யானை வழித்தட பரிந்துரையை, தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது என வேண்டுகோள் விடுக்கிறோம்." எனவும் அவர்கள் கூறினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User