5 பேர் உயிரிழப்பு : அடுத்த முறை கூடுதல் கவனத்துடன் ஏற்பாடு - முதலமைச்சர் உறுதி

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்

Oct 07, 2024 - 15:00
Updated: 2 years ago
0 240
5 பேர் உயிரிழப்பு : அடுத்த முறை கூடுதல் கவனத்துடன் ஏற்பாடு - முதலமைச்சர் உறுதி

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியின் போது உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. வானத்தில் போர் விமானங்கள் நிகழ்ச்சியை காண சென்னை, திருச்சி, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழக காவல்துறை சார்பில் 6 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் 1500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அரசு சார்பில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள், மருத்துவ முகாம், நடமாடும் கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் பொதுமக்களுக்காக செய்யப்பட்டது. இருப்பினும் கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கடும் வெயில் மற்றும் கூட்ட நெரிசல் மேலும் பல்வேறு மருத்துவ காரணங்களால் 5 பேர் உயிரிழந்தனர்.இச்சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த நிலையில், உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னையில் நேற்று இந்திய விமானப்படையினரால் சாகச நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்குத் தேவையான நிருவாகரீதியிலான ஒத்துழைப்பையும், வசதிகளையும் செய்துகொடுப்பதற்காக இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்கென தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து சிறந்ததொரு நிகழ்ச்சியை சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இருப்பினும் எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட மிகமிக அதிக அளிவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும்போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொதுப்போக்குவரத்தைப் பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன்.

 அடுத்தமுறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது இவற்றில் கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும். இந்நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் ஐந்து விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் எற்பட்டன என்பதை அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்தேன்.

 உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு இத்தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User