வழிப்பறியில் ஈடுபட்ட போதைக் கும்பல்.. 3 மணி நேரத்தில் தட்டித் தூக்கிய போலீஸ்.. 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

May 05, 2024 - 22:02
0 276
வழிப்பறியில் ஈடுபட்ட போதைக் கும்பல்.. 3 மணி நேரத்தில் தட்டித் தூக்கிய போலீஸ்.. 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

மயிலாடுதுறை அருகே  இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் செயின் மற்றும் செல்போனை, மதுபோதையில் பறித்துச் சென்ற 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை 3 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை அருகே உள்ள நல்லத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (44). இவர் மின்வாரியத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் பெரம்பூரில் இருந்து கடக்கம் வழியாக நல்லத்துக்குடி கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது கடக்கம் பாலம் அருகே மதுபோதையில் இருந்த 4 பேர், மகாலிங்கத்தை வழிமறித்து தாக்கி, அவர் அணிந்திருந்த 3 சவரன் செயின், ஒரு செல்போன் மற்றும் 2,000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெரம்பூர் காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார் மகாலிங்கம்.

சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் ஆய்வாளர் நாகவல்லி தலைமையிலான போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட  இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு மோட்டார் கொட்டகையில் 4 பேரும் பதுங்கி இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து அப்பகுதிக்கு அவர்கள் சென்றுள்ளனர். போலீசாரை கண்டதும் ஓடிய 4 பேரையும் மடக்கிப்பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்துள்ளனர்.

விசாரணையின் முடிவில் வழிப்பறியில் ஈடுபட்டது மயிலாடுதுறை சோழசக்கரநல்லூர் பகுதியை சேர்ந்த சுல்தான் (20), மயிலாடுதுறையைச் சேர்ந்த அபிநாத்(19) மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள்  என்பது தெரியவந்தது. இதையடுத்து மகாலிங்கத்திடம் இருந்து வழிப்பறி செய்யப்பட்ட பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து சுல்தான், அபிநாத் ஆகியோரை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொறையார் கிளைச் சிறையில் அடைத்த போலீசார், 17 வயது சிறுவர்கள் இருவரையும் தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். வழிப்பறிச் சம்பவம் நடந்த 3 மணி நேரத்திற்குள்ளாகவே கொள்ளையர்களை கைது செய்த பெரம்பூர் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User