ஊழியரை தாக்கி கொள்ளை..! பெட்ரோல் பங்க்கில் அதிர்ச்சி.. வெளியான சிசிடிவி - தூக்கிய போலீஸ்..

Apr 28, 2024 - 13:42
0 266
ஊழியரை தாக்கி கொள்ளை..! பெட்ரோல் பங்க்கில் அதிர்ச்சி.. வெளியான சிசிடிவி - தூக்கிய போலீஸ்..

கன்னியாகுமரி  அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற சிறுவன் உட்பட 3 இளைஞர்களை போலீசார் கூண்டோடு தூக்கியுள்ளனர். இந்த இளம் திருடர்கள் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தக்கலை, வடசேரி உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக பைக் திருட்டு, செல்போன் பறிப்பு மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை போன்ற சம்பவங்கள் அரங்கேறி வந்தன. தொடர் கொள்ளையால் அவதி அடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல், தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது தெரியவந்தது.

இதனிடையே கடந்த 4-ம் தேதி அந்த கும்பல் புங்கறை பகுதியை மகேஷ் என்பவர் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் பைக்கை திருடி சென்றது.  இதுகுறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி திக்கணம்கோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு 3 இளைஞர்கள் பெட்ரோல் போடுவதற்காக வந்தனர். பெட்ரோல் போட்டவுடன் ஒரு இளைஞர் ஊழியரை தாக்கி கீழே தள்ளிவிட, மற்றொருவர் கல்லா பெட்டியில் இருந்து பணத்தை எடுத்த நிலையில் மூவரும் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடினர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. 

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கிய தனிப்படை போலீசார், ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த நவீன், பிரவீன் மற்றும் சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பெட்ரோல் பங்க் கொள்ளையின் போது அவர்கள் ஓட்டி வந்த பைக், புங்கறை பகுதியில் மகேஷிடம் திருடப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. 

சமீபகாலமாக இளைஞர்கள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. கஞ்சா, மதுவுக்கு அடிமையாகும் சில இளைஞர்கள், கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறப்படும் நிலையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்…

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User