ஆன்லைனில் வேலை.. கை நிறைய சம்பளம்.. இளைஞரிடம் ரூ.2.50 லட்சம் ஏமாற்றிய பெண்.. 3 பேர் கைது

May 09, 2024 - 16:15
0 289
ஆன்லைனில் வேலை.. கை நிறைய சம்பளம்.. இளைஞரிடம் ரூ.2.50 லட்சம் ஏமாற்றிய பெண்.. 3 பேர் கைது

ஆன்லைனில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளைஞரிடம் நூதனமான முறையில் ரூ.2.50 லட்சம் ஏமாற்றிய பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருண். இவர் பட்டப்படிப்பு  முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். கடந்த சில நாட்களாக ஆன்லைனில் வேலை தேடிவந்த அருணின் செல்போன் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் 30 தேதி லிங்க் ஒன்று வந்துள்ளது. அதில் வேலைவாய்ப்பு குறித்து பதிவிட்டிருந்ததால் உடனே அருண் அந்த லிங்க்கை கிளிக் செய்துள்ளார்.

அப்போது, வேலை வேண்டும் என்றால் தாங்கள் சொல்லும் டாஸ்க்கை நிறைவு செய்ய வேண்டும் என்று அந்த ஆன்லைன் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்து. இதனை நம்பி அருண் டாஸ்க்கை செய்யத் தொடங்கிய போது ஒவ்வொரு டாஸ்க்குக்கும் ஒரு தொகையை செலுத்த வேண்டும், அப்போது தான் டாஸ்க்கின் இறுதி கட்டத்திற்கு செல்ல முடியும் என குறிப்பிட்டிருந்தது. 

ஒவ்வொரு லிங்க்கையும் கிளிக் செய்து உள்ளே செல்லும்போதும் கட்டணம் செலுத்தவேண்டியிருந்ததால், அருண் தனது வங்கிக்கணக்கில் இருந்து சிறிது சிறிதாக பணம் செலுத்தி மொத்தம் ரூ.2.50 லட்சம் வரை செலுத்தியுள்ளார். பின்னர் அந்த ஆன்லைன் பக்கத்தில் குறிப்பிட்டது போல எந்த வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை. 

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருண் இது குறித்து கடந்த ஏப்ரல் 30ம் தேதி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அருண் செலுத்திய வங்கி கணக்கு எண்ணை வைத்து விசாரணையை தொடங்கினர்.

பின்னர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் செல்போன் எண்களை வைத்து அவர்களது இருப்பிடத்தை கண்டுபிடித்த தனிப்படை போலீஸார், அங்கு சென்று, பெண் 3 உட்பட பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்‌.

விசாரணையில் அவர்கள் செங்குன்றம் பகுதியை சேர்ந்த தேஜா, அண்ணாநகரைச் சேர்ந்த விஜய், ஐதராபாத்தை சேர்ந்த சரஸ்வதி என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதும், இதற்கு மூளையாக வடமாநில கும்பல் ஒன்று செயல்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரிடம் இருந்தும், 15 ஏடிஎம் கார்டுகள்,  3 செல்போன்கள் மற்றும் 15 வங்கிக் கணக்கு புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய வடமாநில கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User