வலுப்பெறும் EL NINO.. உலகத்தை அச்சுறுத்துப் போகும் பேராபத்து..!

வெப்ப அலைகள், வறட்சி, கனமழை உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளின் அபாயம் உலகின் பல பகுதிகளில் அதிகரிக்கக்கூடும் என உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது. 

Jul 04, 2026 - 09:30
0 328
வலுப்பெறும் EL NINO.. உலகத்தை அச்சுறுத்துப் போகும் பேராபத்து..!

வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் எல் நினோ (El Niño) நிலைமைகள் உருவாகி, வரும் மாதங்களில் வேகமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. WMO வெளியிட்டுள்ள மாதாந்திர Global Seasonal Climate Update அறிக்கையின்படி, 2026 ஜூலை முதல் செப்டம்பர் காலகட்டத்தில் எல் நினோ நிகழ்வு தீவிரமடைந்து, வலுவான கட்டத்தை எட்டும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

WMO-வின் பல்வேறு கூட்டாளர் அமைப்புகளின் கணிப்புகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில், மத்திய மற்றும் கிழக்கு சமவெளிப் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கண்காணிக்கப்பட்ட பகுதிகளில் பருவகால சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸுக்கும் மேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல் நினோவின் தாக்கம் அதன் தீவிரம், நீடிப்பு காலம், பருவநிலை மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனைப் பருவநிலை (Indian Ocean Dipole) போன்ற பிற காலநிலை காரணிகளுடன் அது எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதையும் பொறுத்து மாறுபடும் என்று WMO தெரிவித்துள்ளது.

உலகின் அனைத்து பகுதிகளும் எல் நினோவால் ஒரே மாதிரியாக பாதிக்கப்படாது. ஒரே பிராந்தியத்திற்குள்ளேயே கூட தாக்கங்கள் வேறுபடக்கூடும் என்றும் அந்த அமைப்பு விளக்கியுள்ளது.

2026 ஜூலை–செப்டம்பர் காலகட்டத்தில் மத்திய மற்றும் கிழக்கு சமவெளிப் பசிபிக் பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வெப்பமண்டல இந்தியப் பெருங்கடல் பகுதிகள், இந்திய துணைக்கண்டம் மற்றும் ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட குறைவான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எல் நினோ காரணமாக உலகளாவிய வெப்பநிலையும் கூடுதல் உயர்வைக் காணக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் பருவமழைக் காலத்தில் வறண்ட நிலை அதிகரிக்கலாம். ஆனால் கிழக்கு ஆப்பிரிக்காவில் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான மழைக்காலத்தில் அதிக மழை பெய்யும் சூழல் உருவாகும் என முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த எல் நினோ எச்சரிக்கையைத் தொடர்ந்து, உயிர்களை காப்பதற்கும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கும் அரசுகளுக்கு துல்லியமான மற்றும் துரிதமான வானிலை முன்னறிவிப்புகளை வழங்கும் நோக்கில், WMO மற்றும் அதன் உறுப்பினர் நாடுகள், பிராந்திய காலநிலை மையங்கள் இணைந்து முன்னெப்போதும் இல்லாத அளவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User