அநாகரீக கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் - திருமாவளவனுக்கு வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

பெருமைமிக்க பதவிகளை வகித்த ஒரு பெண் தலைவர் மீது, இப்படிப்பட்ட தனிப்பட்ட தாக்குதலை நீங்கள் நிகழ்த்துவீர்கள் என்பதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

Oct 03, 2024 - 19:31
0 366
அநாகரீக கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் - திருமாவளவனுக்கு வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
அநாகரீக கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் - திருமாவளவனுக்கு வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

ஒரு பெண் தலைவரைப் பற்றி நீங்கள் கூறிய அநாகரீகமாக கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என திருமாவளவனுக்கு வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் நடந்த விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் பேசிய திருமாவளவன், நாங்கள் சாதி, மத பெருமையை பேசக்கூடியவர்கள் அல்ல. கெளதம புத்தரின் பெருமையை பேசக்கூடியவர்கள்.மாமனிதர்கள் அனைவரும் மதுவை எதிர்த்தனர் என்றார். மேலும் தான் மது குடித்தது கிடையாது.ஏன் மதுவை தொட்டுக்கூட பார்த்தது கிடையாது என்றார். மேலும்,  தன் மீது விமர்சனம் செய்த தமிழிசை செளந்தரராஜனும் என்னை போலவே குடிக்க மாட்டார் என நம்புகிறேன் என தெரிவித்தார். இதற்கு தமிழிசை செளந்தரராஜன், அரசியல் வாழ்க்கையில் இது போன்ற கீழ்தரமான கருத்தை அண்ணன் திருமாவளவன் கூறுவார் என என் கனவிலும் நினைக்கவில்லை என கூறியிருந்தார். மேலும் திருமாவளவனின் கருத்திற்கு பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் திருமாவளவன் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “பொது வாழ்வில் இருக்கும் ஒரு பெண் அரசியல் தலைவரின் மீது, “அவர் குடிக்க மாட்டார் என நம்புகிறேன்” என்ற தரம்தாழ்ந்த விமர்சனத்தை அதுவும் ஒரு பொது மேடையில் திருமாவளவன் வைத்திருப்பது மிக வருத்ததிற்குறியது. “மது ஒழிப்பு என்பதே காந்தியக் கொள்கைதான், ஆனால், மது ஒழிப்பு மாநாடு நடத்தும் விசிக தலைவர் திருமாவளவன், நமது மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தாமல் சென்றது ஏன்? ஒருவேளை தங்களின் கொள்கைக்கு எதிராக மது ஒழிப்பை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்ற தோல்வியை ஒப்புக்கொண்டு, குற்ற உணர்வில் சென்று விட்டாரா?” என்று தான் பாஜகவின் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினாறே  தவிர, உங்களின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றி எவ்வித கருத்துக்களையும் அவர் தெரிவிக்கவில்லை. 

ஆனால், அதை சரிவர புரிந்து கொள்ளாமல், ஒரு பெண் மருத்துவர், மூத்த அரசியல் தலைவர், முன்னாள் மாநில ஆளுநர் போன்ற பல உயர் பெருமைமிக்க பதவிகளை வகித்த ஒரு பெண் தலைவர் மீது, இப்படிப்பட்ட தனிப்பட்ட தாக்குதலை நீங்கள் நிகழ்த்துவீர்கள் என்பதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறான உங்களின் மாண்பற்ற விமர்சனங்கள் கடும் கண்டனத்திற்குறியது.எனவே, ஒடுக்கப்பட்ட மக்களின் நலவாழ்விற்கு போராடுவதாக கூறிக்கொள்ளும் நீங்கள், ஒரு பெண் தலைவரைப் பற்றி நீங்கள் கூறிய அநாகரீகமாக கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User