முத்தூட் நிதி நிறுவனம் மோசடி...? உண்மை என்றால் உரிமத்தை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவு...

மொத்தம் ரூ.3.64 கோடி மதிப்பிலான 9 கிலோ தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளன - தென்மண்ட ஐ.ஜி

Mar 15, 2024 - 18:08
0 3.4
முத்தூட் நிதி நிறுவனம் மோசடி...? உண்மை என்றால் உரிமத்தை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவு...

முத்தூட் பின்கார்ப் நிறுவனத்தின் பெயரில் பொதுமக்களிடம் நகை மோசடி செய்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தால் அந்நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் வி.கே.புதூர் ஊத்துமலை பகுதி மக்களிடம்  10 சவரன் நகைகளை அடகு வைத்தால் கூடுதல் வட்டி மற்றும் ரூ.10 ஆயிரம் போனஸ் கிடைக்கும் எனவும் சேமிப்பு திட்டத்தில் நகைகளை அடகு வைத்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறி முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவன பெயரில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் நிறுவனத்தின் மேலாளர்கள் இளவரசன், இமானுவேல், ஆடிட்டர் கண்ணன், வர்ஷா, கலைச்செல்வி, முத்தமிழ்ச் செல்வி, அந்தோணியம்மாள், வெள்ளைதுரை, காளீஸ்வரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

இதையடுத்து முன்ஜாமீன் கோரி முத்தமிழ்ச் செல்வி, அந்தோணியம்மாள், வெள்ளத்துரை, காளீஸ்வரி ஆகிய நால்வரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, நகை மோசடி புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தென்மண்டல ஐ.ஜி-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (மார்ச் 15) நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தென்மண்டல ஐஜி அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் "மதுரை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் முத்தூட் முத்தூட் நிதி நிறுவனத்தின் பெயரில் நகைகளை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் ரூ.3.64 கோடி மதிப்பிலான 9 கிலோ தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் 2 வழக்குகள், தூத்துக்குடியில் 2 வழக்குகள், தென்காசியில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து  அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்  நம்பிசெல்வன், தூத்துக்குடி மாவட்டத்தில் நகைகளை மோசடி செய்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யுமாறு மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடிக்கு ஓய்வு பெற்ற காவல்துறையினரும் துணையாக இருந்துள்ளனர். எனவே முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார். தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை வரம்பிற்கு கீழ் வரும் மாவட்டங்களில் நிதி நிறுவன மோசடி குறித்து மாவட்ட காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தால் அந்நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும்,  மோசடியால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்?. அவர்களின் புகார்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன?, மோசடி செய்தவர்கள் யார்? யார்? என்பது குறித்து ஜூன் மாதம் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 2
Love Love 0
Funny Funny 1
Wow Wow 1
Sad Sad 2
Angry Angry 2

Comments (0)

User