சிவகங்கை காங்கிரஸில் புதிய ட்விஸ்ட்.. தலைத்தூக்கும் கோஷ்டி மோதல்..? 

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து, அக்கட்சியில் கோஷ்டி மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Jun 30, 2026 - 16:30
Updated: 26 days ago
0 270
சிவகங்கை காங்கிரஸில் புதிய ட்விஸ்ட்.. தலைத்தூக்கும் கோஷ்டி மோதல்..? 

காங்கிரஸில் கோஷ்டி மோதல் இல்லையென்றால் தான் ஆச்சரியம். அந்தளவிற்கு காங்கிரஸையும் கோஷ்டி மோதலையும் பிரிக்கவே முடியாது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை இருந்தபோது, அவருக்கு எதிராக பல்வேறு கோஷ்டிகள் இருந்தன. குறிப்பாக, திமுகவிற்கு எதிராக இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் தனித்தனி கோஷ்டிகளாக பிரச்னைகளை உருவாக்கிக் கொண்டிருந்த்தாகக் கூறப்படுகிறது. 

சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, தவெகவுடன் கூட்டணி அமைத்த்தால், திமுக ஆதரவாளராக இருக்கும் செல்வபெருந்தகையை மாற்றி காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி என பலர் இந்த ரேஸில் முட்டி மோதினர். 

இந்த நிலையில், கடும்போட்டிக்கு மத்தியில் மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

இந்த நியமனத்திற்கு பிறகு, காங்கிரஸில் கோஷ்டி மோதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள். குறிப்பாக, கார்த்தி சிதம்பரம் கோஷ்டி இம்மோதலில் முன்னணியில் இருப்பதாக்க் கூறப்படுகிறது. 

இதுவரை மாவட்ட காங்கிரஸில் கார்த்தி சிதம்பரம் தரப்பே ஆதிக்கம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் கார்த்தி சிதம்பரத்துக்கே தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவரது ஆதரவாளரான மாங்குடிக்கு காரைக்குடி தொகுதியில் போட்டியிட இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், கடந்த தேர்தலில் மாங்குடி தோல்வியை சந்தித்தார்.

இதற்கிடையில், மாவட்டத் தலைவர் பதவியிலும் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை நிலைநிறுத்தியதாக கூறப்படுகிறது. தனது ஆதரவாளரான சஞ்சய்யை மாவட்டத் தலைவராக நியமித்ததோடு, வட்டார மற்றும் நகர நிர்வாகிகளும் அவரது ஆதரவாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்றிருப்பது சிவகங்கை அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தரப்புக்கு நெருக்கமானவராக கருதப்படும் மாணிக்கம் தாகூர், இனி சிவகங்கை மாவட்ட அரசியலிலும் தீவிர கவனம் செலுத்துவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், செப்டம்பருடன் மாவட்டத் தலைவர் சஞ்சயின் பதவிக்காலம் நிறைவடைவதால், புதிய மாவட்டத் தலைவர் நியமனத்தில் மாணிக்கம் தாகூர் தனது ஆதரவாளரை முன்னிறுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

இதனால், சிவகங்கை காங்கிரஸில் கார்த்தி சிதம்பரம் தரப்புக்கும் மாணிக்கம் தாகூர் ஆதரவாளர்களுக்கும் இடையே அதிகாரப் போட்டி தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர்.

மாவட்ட அரசியலில் யாருடைய செல்வாக்கு மேலோங்கும் என்பதையும், மாநிலத் தலைமையின் ஆதரவு எந்த அணிக்கு கிடைக்கும் என்பதையும் பொறுத்திருந்தே அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User