எங்ககிட்ட இருந்து யாரும் தப்பவே முடியாது... பறக்கும் படையினர் தொடர் வேட்டை...

எண்ணெய் விற்று கொண்டு வந்த ரூ.2.70 லட்சம் ரொக்கம் பறிமுதல்.

Mar 19, 2024 - 14:03
0 196
எங்ககிட்ட இருந்து யாரும் தப்பவே முடியாது... பறக்கும் படையினர் தொடர் வேட்டை...

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் நடத்தி வரும் வாகன சோதனையில் இலட்சக் கணக்கான ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தைத் தடுக்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர், போலீசாருடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சாலை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் கோவிந்தராஜ் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டுவந்த ரூ.3.06 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் செந்தில்குமார் என்பவர் கொண்டு வந்த ரூ.74,600 ரொக்கமும் கைப்பற்றப்பட்டு மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.2.70 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் பாலாஜி என்பவர் பல்வேறு பகுதிகளில் எண்ணெய் விற்ற பணத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் ஒரத்தநாடு வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சாலையில் உள்ள பொட்டல்காடு விளக்கு அருகே தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தரணீஸ்வரன் என்பவர் காரில் கொண்டு வந்த ரூ.86,750 ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் உப்பள தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக அந்தப் பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. 

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே நடந்த சோதனையில் லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான 240 உர மூட்டைகளை உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வேறு ஒரு இடத்தில் நடந்த சோதனையில், ஆடு வியாபாரிகளிடம் இருந்து ரூ.98 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

கும்பகோணம் சாலையில் நாடார் வெட்டாறு பாலம்  பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் காரில் கொண்டு வந்த ரூ.1.13 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User