வறட்சி நாடாகப்போகும் இந்தியா? எல் நினோவால் பெரும் ஆபத்து..!

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் ‘எல் நினோ’ காலநிலை நிகழ்வு தீவிரமடைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மற்றும் புவி அமைப்பு அறிவியல் அமைச்சகம் எச்சரித்துள்ளன.

Jun 13, 2026 - 03:16
0 471
வறட்சி நாடாகப்போகும் இந்தியா? எல் நினோவால் பெரும் ஆபத்து..!

எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ஓர் இயற்கையான நிகழ்வாகும். இது உலகம் முழுவதிலும் உள்ள வானிலையை பாதிக்கூடியது. அடுத்த சில மாதங்களில் தொடங்க உள்ள எல் நினோ வானிலை அமைப்பின் புதிய கட்டம், உலகளாவிய வெப்பநிலையை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என்று உலக வானிலை ஆய்வு மையம் கூறுகின்றது. அதுமட்டுமல்லாமல், இந்தாண்டு எல் நினோவின் தாக்கம் மேலும் வலுவடையக் கூடும் என்றும், இது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வானிலையில் இன்னும் பரவலான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் ஐ.நா எச்சரித்துள்ளது.

மேலும், இந்த எல் நினோ இதுவரை இல்லாத அளவுக்கு மிக வலுவான "சூப்பர் எல் நினோ"-வாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பசிபிக் பெருங்கடல் மற்றும் வளிமண்டலம் ஆகிய இரண்டிலும் எல் நினோவிற்கான தெளிவான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ள நிலையில், இது உலகளாவிய வானிலையிலும், இந்தியாவின் பருவமழைப் பொழிவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

2025ஆம் ஆண்டின் நடுப்பகுதிவரை பசிபிக் பெருங்கடலின் காலநிலை நிலைமை இயல்பாக இருந்த நிலையில், அதன் பின்னர் 'லா நினா' எனப்படும் குளிர்ச்சியான கட்டத்திற்கு மாறியது. தற்போது அந்த நிலை மாறி, கடல் மேற்பரப்பு வெப்பநிலை கணிசமாக உயர்ந்ததால் 'எல் நினோ' சூழல் உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மே மாத ஆய்வுகளின்படி, பசிபிக் பெருங்கடல் மட்டுமின்றி, அரபிக்கடல், வங்காள விரிகுடா உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் பகுதிகளும் வழக்கத்தை விட அதிக வெப்பநிலையுடன் பதிவாகியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் எல் நினோ நிகழ்வு மிதமான அளவிலிருந்து கடுமையான நிலை வரை வலுப்பெறக்கூடும் என மான்சூன் மிஷன் அமைப்பின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

பொதுவாக எல் நினோ வலுவடையும் ஆண்டுகளில் இந்தியாவில் பருவமழை பாதிக்கப்பட்டு, மழைப்பொழிவு குறைவதுடன் வறட்சி அபாயமும் அதிகரிக்கும். இதனால், இந்த ஆண்டின் பருவமழை நிலவரம் குறித்து விவசாயிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User