4-ம் ஆண்டில் திமுக அரசு.. “இது சொல்லாட்சி அல்ல, செயலாட்சி”.. முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..

May 07, 2024 - 09:47
0 358
4-ம் ஆண்டில் திமுக அரசு.. “இது சொல்லாட்சி அல்ல, செயலாட்சி”.. முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளன. 
 
தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து 2021 மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். 
 
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் (மே 7) மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
அந்த பதிவில், “இது சொல்லாட்சி அல்ல, செயலாட்சி. மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது. நம்பிக்கையோடு முன்செல்கிறேன்…  பெருமையோடு சொல்கிறேன். தலைசிறந்த மூன்றாண்டு… தலைநிமிர்ந்த தமிழ்நாடு” என பதிவிட்டுள்ளார். 
 
மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “3 ஆண்டு காலத்தில் நான் செய்து கொடுத்த சாதனைகள், திட்டங்கள், நன்மைகள் என்னவென்று தினம்தோறும் பயனடைந்து வரும் மக்களின் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி என தெரிவித்துள்ளார். 3 ஆண்டு காலத்தில் ஸ்டாலின் என்றால் செயல் என்ற நிரூபித்துக் காட்டியுள்ளேன் எனவும் எப்போதும் நான் சொல்வது இது எனது அரசு அல்ல, நமது அரசு எனவும் தெரிவித்துள்ளார். 
 
நான்காவது ஆண்டில் திராவிட மாடல் அரசு அடியெடுத்து வைக்கும் நிலையில், நாடும், மாநிலமும் பயனுற என்னாளும் நான் உழைப்பேன் என உறுதியேற்று ஆட்சிப் பயணத்தை மக்களின் வாழ்த்துகளோடு தொடர்வேன் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User