”நான் அதிமுகவில் இருக்கேனா?” – சிவிஎஸ் கொடுத்த ஷாக்!

தான் அதிமுகவில் இருக்கேனா இல்லையா என்று தெரியவில்லை என்று ஷாக் கொடுத்துள்ளார் முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம். 

Jul 03, 2026 - 16:04
0 249
”நான் அதிமுகவில் இருக்கேனா?” – சிவிஎஸ் கொடுத்த ஷாக்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இடதுசாரி கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. மறுபுறம், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக இந்தத் தேர்தலில் கடுமையான பின்னடைவைச் சந்தித்து, எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறும் வாய்ப்பையும் இழந்துள்ளது.

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அதிமுகவில் அதிருப்தி குரல்கள் அதிகரித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான ஒரு தரப்பும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மற்றொரு தரப்பும் தனித்தனியாக செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தவெகவில் இணைந்துள்ள நிலையில், வைகைச் செல்வனும் அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். இந்தச் சூழலில், சி.வி. சண்முகமும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, திண்டிவனத்தில் உள்ள சி.வி. சண்முகத்தின் இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி கட்டிய கார்களில் வந்த சில நிர்வாகிகளும் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவே சி.வி. சண்முகத்தின் தவெக இணைப்பு குறித்த தகவல்களுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சி.வி. சண்முகம், “அதிமுகவில் நான் இருக்கிறேனா? இல்லையா? என்பது எனக்கே தெரியவில்லை. அதை எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுச் சொல்லுங்கள்” என்று தெரிவித்தார். அவரது இந்த கருத்து அதிமுக அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User