அதிருப்தி அம்பு எடப்பாடி மீது... சி.வி.சண்முகத்தின் ரகசிய கணக்கு!

த.வெ.க.வின் அதிரடி அலையில் சிக்கி அ.தி.மு.க. ஆட்டம் கண்டுவரும் நிலையில், கட்சிக்குள் தனிமரமாக நின்றுகொண்டு எடப்பாடியை ஏகத்துக்கும் வெளுத்திருக்கிறார் சி.வி.சண்முகம். அதிலும், தன்னை வன்னியர் சமூகத்தின் முகமாக முன்னிறுத்திக்கொள்வதும், மீண்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களுடன் அவர் ஆலோசனை செய்திருப்பதும்தான் எம்.ஜி.ஆர். மாளிகையை கிடுகிடுக்க வைத்திருக்கும் அரசியல் ஹாட் அப்டேட்!

Jun 23, 2026 - 10:30
Updated: 1 month ago
0 326
அதிருப்தி அம்பு எடப்பாடி மீது... சி.வி.சண்முகத்தின் ரகசிய கணக்கு!
cv shanmugam attacks edappadi palaniswami amid admk crisis

இதுகுறித்து அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் அறிந்த அரசியல் பார்வையாளர் ஒருவரிடம் பேசினோம். "எடப்பாடிக்கு எதிராக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் போர்க்கொடி தூக்கிய 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களில், 4 பேர் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் ஐக்கியமாகினர். பின், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பெரும்பான்மை கட்சித்தாவல் தடைச்சட்டத்துக்கு பயந்து எடப்பாடியிடமே சரண்டராகினர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்
ஆனால், சி.வி.சண்முகம் மட்டும் எடப்பாடியிடம் சரணடையாமல் மல்லுகட்டி வருகிறார். இந்த நிலையில், கடந்த ஜூன் 14 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த சண்முகம், எடப்பாடியை ஏகத்துக்கும் விளாசியதோடு, 'அ.தி.மு.க. வென்ற 47 தொகுதிகளில், 31 வடமாவட்ட தொகுதிகளின் வெற்றி பா.ம.க. போட்ட பிச்சை. பாமக. இல்லையென்றால், ஏழெட்டு தொகுதிகளில்தான் அதி.மு.க. வென்றிருக்கும் செயற்குழுவையாவது எடப்பாடி உடனடியாக கூட்ட வேண்டும். அடுத்து என்ன வழிமுறைகள் என்று எங்களுக்கும் தெரியும்' என்று பட்டாசாக வெடித்தார்.

இன்று தனிமரமாக இருக்கும்போதும் சண்முகம் இவ்வாறு பேசுவதன் பின்னணியை கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது சி.வி.சண்முகம், தான் சார்ந்த வன்னியர்கள் அதிகமாகவுள்ள பா.ம.க.வுக்கு பெருமை தேடித் தரும் அதேவேளையில், தன்னை அ.தி.மு.க.வின் வலிமையான வன்னியர் சமூகத் தலைவராகவும் முன்னிலைப்படுத்திக்கொள்கிறார். இதன் பின்னணியில் பல அரசியல் கணக்குகள் இருக்கின்றன.

எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எடப்பாடியிடம் சரண்டரானாலும், அவர்களிடம் இருந்து பறித்த கட்சி பொறுப்புகளை எடப்பாடி திருப்பித் தரவில்லை. அந்த கோபத்தில்தான் சி.விஜயபாஸ்கரும் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். அவரைப்போலவே இதுவரை எடப்பாடியிடம் மன்னிப்புக் கடிதம் வழங்காத சி.வி.சண்முகம், அ.தி.மு.க.வை விட்டு விலகாமலேயே முரண்டுபிடிக்கிறார். ஆனால், எடப்பாடி இறங்கிவருவதாக இல்லை. எனவேதான், அவரையே மிரட்டும் வகையில் வன்னியர் சமூக வாக்குகளை முன்னிறுத்தி எடப்பாடியை எச்சரிக்கிறார் சண்முகம்.

அதற்கு, தான் அதிகாரத்தில் இருந்தபோது சமூகரீதியாக முன்னெடுத்த முயற்சிகள் இப்போது கைகொடுக்கும் என நம்புகிறார் சண்முகம். அதாவது, வன்னியர் சமூக சொத்துகளைப் பாதுகாக்க 2009ல் உருவான நலவாரியத்தை முறைப்படுத்தக்கோரி, வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.இராமமூர்த்தி சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தார். அதன்படி, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அச்சொத்துகளை பாதுகாக்க 2018ல் சிறப்பு சட்டமும் இயற்றப்பட்டது.

அப்போது சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் சண்முகம். அதற்காக அப்போது பல்வேறு வன்னியர் அமைப்புகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து ஒரே மேடையில் ஏற்றியவர் அவர்தான். அதேபோல, 2019லிருந்து அ.தி.மு.க.வுடன் பா.ம.க கூட்டணி (2024 தவிர்த்து) நிலைக்கவும், 10.5 % இடஒதுக்கீடு கொண்டுவந்ததிலும் சண்முகத்தின் பங்கு அதிகம். இப்படிகை உருவான செல்வாக்கு, தனக்கு இப்போதும் கைகொடுக்கும் என நம்புகிறார் சண்முகம்.

தவிர, தான் இப்படி பேசுவதால் மீண்டும் அதிமுகவில் தனக்கு பலம் கிடைக்கலாம். அல்லது, தன் பேச்சு எடப்பாடியை கோபப்படுத்தினால் கட்சியைவிட்டு நீக்குவார். அப்போது கட்சித்தாவல் தடைச்சட்டத்திலிருந்து தப்பித்து, எம்.எல்.ஏ. பதவியை தக்கவைத்துக்கொண்டே மாற்றுக்கட்சிக்கு சென்றுவிடலாம் என கணக்குப் போடுகிறார் சண்முகம். எம்.பி. பதவியையும் பறிகொடுத்துவிட்டு, எம்.எல்.ஏ. பதவியுடனும் விளையாட அவர் தயாராக இல்லை. எனவே, தவெ. கவை முதன்மை ஆப்ஷனாக வைத்து கட்சித்தாவும் டீலிங்கை தொடங்கியவர், அடுத்தடுத்து தி.மு.க., பா.ஜ.க. தரப்பிலும் நூல்விட்டு பார்த்திருக்கிறார். தி.மு.க. தரப்பில் வடமாவட்ட சீனியர்களின் எதிர்ப்பால் அங்கு தயக்கம் நிலவுகிறது.

அதேபோல, தமிழகத்தின் பெரும்பான்மை சமூகமான வன்னியர் சமூகத்திலிருந்து தங்களுக்கான பலமான முகம் இல்லை என தவித்துவந்த டெல்லி, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மூலமாக சண்முகத்தை வளைத்துப்போட நினைக்கிறது. இதன்மூலம் அதி.மு.க. மேலும் பலவீனப்படும்,அது பா.ஜ.க வளர்ச்சிக்கு உதவும்
எனவும் டெல்லி நினைக்கிறது. எனவே, ராஜ்யசபா எம்.பி பதவி உள்ளிட்ட சில ஆஃபர்களை சண்முகத்துக்கு கொடுத்திருக்கிறது டெல்லி. அது நடந்தால் கூட்டணி முறியுமென எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டை போடுவதால், அதில் குழப்பம் நீடிக்கிறது. இந்த நிலையில்தான் 'த.வெ. கவுக்கு போகலாம்' என்ற தனது ஆழ்மனது ஆசையை செயல்படுத்த சி.வி.சண்முகம் தயராகியிருக்கிறார். இம்முடிவுக்கு அவரின் அண்ணன் ராமமூர்த்தி ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்தபோதும், விஜய்யை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறாராம் சண்முகம்.

இந்த நிலையில், சட்டமன்றத்தை முதல்நாளே புறக்கணித்துவிட்டு சென்னை வீட்டிலிருந்த சண்முகத்தை எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சந்தித்துள்ளார்கள். அவர்களிடமும் அவர், 'உங்களிடம் சொல்லாமல் எந்த முடிவும் எடுக்கமாட்டேன்' சொல்லியிருக்கிறார். எனவே, சி.வி. சண்முகம் தனியாக கட்சியிலிருந்து விலகுகிறாரா இல்லை மீண்டும் அதிருப்தி அணியை திரட்டி வெளியேறுகிறாரா இல்லை வன்னியர் அமைப்பை தொடங்கப் போகிறாரா என்பதெல்லாம் இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்' என்றார் விரிவாக இதுகுறித்துப் பேசும் வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.இராமமூர்த்தி, "இடஒதுக்கீடு, பொதுச்சொத்து வாரியம், நலவாரியம் விவகாரத்தில் நான்தான் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு வென்றேன். மாநில பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைதான் இதில் முக்கியமானது. ஆனால், சி.வி.சண்முகம் சட்டத்துறை அமைச்சராக இருந்ததால் அவர்தான் எல்லாம் செய்தார் என நினைக்கிறார்கள். இதற்கும் சட்டத்துறைக்கும் எந்த சம்பந்தமுமே கிடையாது என்றார்.
இறுதியாக சி.வி.சண்முகத்திடம் விளக்கம் கேட்டோம். நான் இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை" என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
அரசியல் சதுரங்கம்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User