எனக்குள் பல வினாக்கள்!.. நம் பார்வையில் மாற்றம் வரும்.. மாற்றுத் திறனாளிகள் குறித்து மனம் திறந்த ஜோதிகா..

May 05, 2024 - 20:34
0 307
எனக்குள் பல வினாக்கள்!.. நம் பார்வையில் மாற்றம் வரும்.. மாற்றுத் திறனாளிகள் குறித்து மனம் திறந்த ஜோதிகா..

ஸ்ரீகாந்த் திரைப்படம் வெளியான பிறகு பார்வைத்திறன் சவால் உடையவர்களை பற்றி நாம் கொண்டிருக்கும்  பார்வையில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். 

பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் ஜோதிகா முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'ஸ்ரீகாந்த்' திரைப்படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்துள்ள ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இயக்குநர் துஷார் ஹிர நந்தானி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்ரீகாந்த்' திரைப்படத்தில் ஆலயா எஃப், சரத் கெல்கர், ஜமீல் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரதம் மேத்தா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆனந்த் மிலிந்த், தனிஷ் பக்ஷி,  சாஸெட் - பரம்பரா மற்றும் வேத் சர்மா ஆகியோர் இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர். டி சீரிஸ்  மற்றும் சாக் இன் சீஸ் பிலிம் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், கிருஷ்ணகுமார் மற்றும் நிதி பார்மர் ஹிராநந்தானி ஆகியோர் இணைந்து ஸ்ரீகாந்த் திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். 


இந்த நிலையில் ஸ்ரீகாந்த் படம் தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் உள்ள பிவிஆர் திரையரங்க வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், ஜோதிகா, இயக்குநர் துஷார் ஹிராநந்தானி ஆகியோர் கலந்து கொண்டனர். 

அப்போது பேசிய நடிகை ஜோதிகா, ''ஸ்ரீகாந்த் திரைப்படத்தின் கதை மிகவும் முன்னுதாரணமானது.  துணிச்சலாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நானும் நடித்ததற்காக பெருமிதம் கொள்கிறேன். எனது திரைப் பயணத்தில் இந்த திரைப்படம் மிகவும் முக்கியமானது எனக் கூறினார்.   

மேலும், ஸ்ரீகாந்த் பொல்லாவின் கதையைக் கேட்டதும் எனக்கு வியப்பு ஏற்பட்டது. அவரை நேரில் சந்தித்து அவரது வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை கேட்ட பிறகு வாழ்க்கை பற்றிய எனது பார்வை முற்றிலும் மாறிவிட்டது. குறிப்பாக பார்வைத்திறன் சவால் உள்ளவர்கள் குறித்த எனது பார்வை மாறிவிட்டது.  அவர்கள் எவ்வளவு திறமை வாய்ந்தவர்கள் என்பது குறித்தும் பொதுவெளியில் அவர்களை எப்படி  நாம் நடத்துகிறோம் என்பது குறித்தும் பல வினாக்கள் எனக்குள் எழுந்தன. படம் வெளியான பிறகு பார்வைத்திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளை பற்றி நாம் கொண்டிருக்கும்  பார்வையில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என உறுதியுடன் கூறினார்.  

தொடர்ந்து பேசிய ஜோதிகா,"காக்க காக்க, 'ராட்சசி' திரைப்படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக 'ஸ்ரீகாந்த்' படத்தில் ஆசிரியையாக நடித்திருக்கிறேன். பாலிவுட் திரையுலகில் நான் நடிக்கும் மூன்றாவது இந்தி திரைப்படம் இது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் இனிமையானது.  பணியாற்றுவதற்கு மொழிகள் தடையில்லை. மலையாள திரையுலகமாக இருந்தாலும், தமிழ் திரையுலகமாக இருந்தாலும் பாலிவுட் திரையுலகமாக இருந்தாலும், திறமையான கலைஞர்களுடன் தான் பணியாற்றியிருக்கிறேன்" என்றார். 

இதையடுத்து இயக்குநர் துஷார் ஹிராநந்தானி பேசுகையில், "ஸ்ரீகாந்த் பொல்லாவின் சுயசரிதையை திரைப்படமாக உருவாக்குவதற்காக ஹைதராபாத்தில் அவரை சந்தித்தேன். 3 நாட்கள் அவருடன் செலவழித்தேன். நிறைய விசயங்கள் குறித்து விவாதித்தோம்.  அப்போது அவர் திரைப்படத்தை உருவாக்குவதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்" என்று கூறினார்.

நேர்காணல் - மீனாட்சி சுந்தரம்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User