நாமக்கல் சிக்கன் ரைஸ் விவகாரம்.. தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி..கண்ணை மறைத்த காதல்...

May 03, 2024 - 21:40
0 325
நாமக்கல் சிக்கன் ரைஸ் விவகாரம்.. தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி..கண்ணை மறைத்த காதல்...

நாமக்கலில் விஷம் கலந்த சிக்கன் ரைஸை சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டியை சேர்ந்தவர் 20 வயதான பகவதி. பொறியியல் மாணவரான இவர், கடந்த 30-ம் தேதி நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகத்தில் தனது குடும்பத்தாருக்கு 7 சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கியிருக்கிறார். வாங்கிய பார்சல்களை கொசவம்பட்டியில் உள்ள தனது தாயார் நதியாவிற்கும், தேவராயபுரத்தில் வசித்து வரும் தனது தாத்தா சண்முகநாதன் மற்றும் குடும்பத்தாருக்கும் கொடுத்திருக்கிறார். இதை சாப்பிட்ட நதியாவிற்கும், சண்முகநாதனுக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் இருந்த மற்றவர்கள் அதை சாப்பிடவில்லை. 
 
இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி நேற்று (மே 2) பரிதாபமாக உயிரிழந்தார். முதலில் உணவகத்தில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உடனடியாக அந்த கடைக்கு சீல் வைத்தனர். அதேசமயம், உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதாக மருத்துவ அறிக்கையில் வெளியான தகவலால் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது.
 
இதையடுத்து, பார்சலை வாங்கிச் சென்ற பகவதி, உணவக உரிமையாளர் ஜீவானந்தம் ஆகியோரிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையில், முதலில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த பகவதி, பின்னர் தனது காதலை குடும்பத்தார் எதிர்த்ததால், சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
 
அதுமட்டுமின்றி, திருமணமான பெண் ஒருவருடனும் பகவதி கள்ளத்தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையும் அவரது குடும்பத்தார் கண்டித்ததால்  ஆத்திரத்தில் குடும்பத்தையே கொல்ல திட்டம் போட்ட பகவதி, இணையத்தில் வாசம் வராத பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி சிக்கன் ரைஸில் கலந்ததும் விசாரணையில் அம்பலமானது. தொடர்ந்து போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
 
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பகவதியின் தாயார் நதியா, சிகிச்சை பலனின்றி இன்று ( மே 3) பரிதாபமாக உயிரிழந்தார்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஒட்டுமொத்த குடும்பத்தையே இளைஞர் கொலை செய்ய துணிந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாயையும், தாத்தாவையும் திட்டமிட்டு விஷம் வைத்து கொலை செய்த அந்த இளைஞருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User