காவிரி ஆற்றில் குளிக்க சென்ற சிறுவர்கள்..  நீரில் மூழ்கி உயிரிழப்பு.. ஈரோட்டில் சோக சம்பவம்..

ஈரோடு அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Apr 30, 2024 - 22:03
0 336
காவிரி ஆற்றில் குளிக்க சென்ற சிறுவர்கள்..  நீரில் மூழ்கி உயிரிழப்பு.. ஈரோட்டில் சோக சம்பவம்..

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம், காந்திநகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரமேஷ் என்பவரின் மகன் மௌனிஷ். தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு மாணவரான மௌனிஷ் அதே பகுதியைச் சேர்ந்த  கபீஷ் என்ற 11ஆம் வகுப்பு மாணவனுடன்  கேட்டுப்புதூர் அருகிலுள்ள கருங்கரடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் கரையில் தென்னை மட்டை எடுப்பதற்காக சென்றதாக சொல்லப்படுகிறது.

அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், சிறுவர்கள் இருவரும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற இருவரும் நீரில் மூழ்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி போலீசார், தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறுவன் கபீஸை உயிரிழிந்த நிலையில் சடலமாக மீட்டனர். இதையடுத்து காணாமல் போன மௌனிஷை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.  இந்த நிலையில் சுமார் மூன்று மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு மௌனிஷ் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனையடுத்து சிறுவர்கள் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User