நெல்லை ஜெயக்குமார் மர்ம மரணம்.. போலீஸ் வளையத்திற்கு வந்த கே.வி.தங்கபாலு.. விறுவிறு விசாரணை

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக தனிப்படை போலீசாரின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. முன்னாள் மத்திய இணையமைச்சர் கே.வி.தங்கபாலுவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

May 07, 2024 - 15:51
0 2.2
நெல்லை ஜெயக்குமார் மர்ம மரணம்.. போலீஸ் வளையத்திற்கு வந்த கே.வி.தங்கபாலு.. விறுவிறு விசாரணை

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங். இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் மாயமானதாக அவரது மகன் ஜெஃப்ரின் புகார் அளித்திருந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மர்ம மரணம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்திருந்தார்.

பிரேத பரிசோதனையில் ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலும் எரிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் நுரையீரலில் திரவங்கள் எதுவுமில்லை என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே உயிரிழந்த நபரை எரியூட்டினால் மட்டுமே குரல்வளை முற்றிலும் எரிந்து போகும். 
இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பிரேத பரிசோதனை அறிக்கை சென்னையில் உள்ள உயர் மருத்துவ குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

இதனிடையே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தனுஷ்கோடி ஆதித்தன் வீட்டில் நேற்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இன்று அவரது மகன்களான ஜெஃப்ரின் மற்றும் ஜோஸ்பின் ஆகியோர் தற்போது போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். உயிரிழந்தது ஜெயக்குமார் தானா என்பதை உறுதி செய்ய அவரது மகன்களிடம் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் வழக்கின் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக முன்னாள் மத்திய இணையமைச்சரும், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவருமான கே.வி. தங்கபாலு இன்று (மே 7) நெல்லை மாவட்ட காவல்துறை முன்பு ஆஜராகினார். நெல்லை தனியார் ஹோட்டலில் தங்கபாலுவிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயக்குமார் தனது மரண வாக்குமூலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு, காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் உள்ளிட்டோரது பெயர்களை குறிப்பிட்டு இருந்தார். மேலும் தனக்கு பணம் தர வேண்டும் என்பது குறித்த பட்டியலையும் தனது மருமகனுக்கு எழுதியிருந்தார் இப்படி அடுத்தடுத்து கடிதங்கள் வெளியான நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். 

நாளுக்கு நாள் ஜெயக்குமாரின் மரணத்தில் உள்ள மர்மமுடிச்சுகள் மேலும் சிக்கலாகி வரும் நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடமும் விசாரணை அடுத்தடுத்து நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 3
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 2
Angry Angry 0

Comments (0)

User