அண்ணாமலை மீதான கிரிமினல் வழக்கு? "நாங்க அனுமதி வழங்கல" ஆளுநர் மாளிகை மறுப்பு

தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம்

May 13, 2024 - 17:10
0 542
அண்ணாமலை மீதான கிரிமினல் வழக்கு?  "நாங்க அனுமதி வழங்கல" ஆளுநர் மாளிகை மறுப்பு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டதாக வெளியான செய்திகளுக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. 

சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி பா.ஜ.க சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அண்ணாமலை, முத்துராமலிங்க தேவர், பேரறிஞர் அண்ணா, பிடி ராஜன் ஆகியோர் தொடர்பான கருத்துக்களை குறிப்பிட்டு இருந்தார். அதில், மீனாட்சி அம்மன் கோவிலில் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியின்போது முத்துராமலிங்க தேவர், அறிஞர் அண்ணாவை பார்த்து கடவுள் பக்தி இல்லாதவர்கள், கடவுள் பக்தி இருப்பவர்களை தவறாக பேசினால் மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டி இருக்கும் என எச்சரிக்கை செய்தார் எனவும், இதனால் பி.டி.ராஜனும், அண்ணாவும் மன்னிப்புக் கேட்டுவிட்டு ஓடினர் எனவும் கூறியிருந்தார்.

அண்ணாமலையின் இந்த பேச்சைக் கண்டித்து சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஸ், இரு பிரிவினரிடையே பதற்றத்தை ஏற்படுத்துதல், பொய்யான செய்தியை மக்களிடையே கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பிரிவுகளில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த சேலம் 4 வது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நடுவர், அண்ணாமலை மீது 2 பிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசின் அனுமதியை பெற வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி அளித்தது. தமிழக அரசின் முக்கிய ஆணைகள் வழக்கமாக ஆளுநரின் உத்தரவுடன் எனக் குறிப்பிட்டு வெளியாவது போன்றே இந்த அனுமதி ஆணையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை என்று தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து கடந்த 2 நாட்களாக ஆளுநர் மாளிகைக்கு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநரின் உத்தரவுடன் எனக் குறிப்பிட்டு தமிழக அரசு அனுமதி ஆணை வெளியிட்ட நிலையில், ஆளுநர் மாளிகையின் இந்த விளக்கம் தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User