மழையால் இடிந்த வீட்டுடன் தாய்- தந்தையை இழந்த சகோதரிகள் உதவி கேட்டு அரசுக்கு கோரிக்கை

எங்களின் நிலை கருதி எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என உருக்கமாக கோரிக்கை

Dec 27, 2023 - 12:53
Updated: 3 years ago
0 146
மழையால் இடிந்த வீட்டுடன் தாய்- தந்தையை இழந்த சகோதரிகள் உதவி கேட்டு அரசுக்கு கோரிக்கை

தொடர் மழையால் குடியிருந்த வீடும் இடிந்து விழுந்ததால் தாய்- தந்தை இல்லாமல் ஆதரவற்ற நிலையில் இருக்கும் இரு சகோதரிகள் நிற்கதியாய் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.தங்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள காலகம் ஊராட்சிக்குட்பட்ட ஒடுக்கண்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி மேனகா.  இவர்களுக்கு ஜெயஸ்ரீ (18) மற்றும் ஸ்ரீநிவிகா (16) என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.மேனகா கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் செல்வராஜூம் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து பாஸ் ஆன ஜெயஸ்ரீ வறுமையின் காரணமாக மேற்கொண்டு படிப்பை தொடராமல் நிறுத்திவிட்டார். 

தாய், தந்தை இறந்ததற்கு பின்பு எந்த வருமானமும் இல்லாமல் இருந்து வந்தனர். குடியிருந்த வீட்டைத் தவிர எந்த சொத்துக்களும் இல்லாத நிலையில் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்த தொடர் கனமழையால் குடியிருந்த வீடும் முற்றிலுமாக இடிந்து விழுந்து  சேதமானது.இதனால் ஜெயஸ்ரீயும், ஸ்ரீநிவிகாவும் செய்வது அறியாத திகைத்து ஆதரவற்ற நிலையில் உள்ளனர்.

தனது அம்மாவை பெற்ற பாட்டி தனது வயதான காலத்திலும் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும் நிலையிலும் தனது பேத்திகள் எந்த ஆதரவும் இல்லாமல் நிற்கதியாய் நிற்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் அந்தப் பெண்களுக்கு ஆதரவு கரம் நீட்டி அவர்களை பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தற்போது கொண்டு போய் தங்க வைத்துள்ளார்.ஜெயஸ்ரீயின் தங்கை ஸ்ரீநிவிகா படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் ஸ்ரீநிவிகாவை மட்டும் தற்போது பாட்டி படிக்க வைத்து வருகிறார்.இந்த நிலையில் ஜெயஸ்ரீ அரசுக்கு உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.

நாங்கள் இருவரும் தாய், தந்தை இழந்து வீட்டையும் இழந்து எந்த ஆதரவும் இல்லாமல் இருப்பதால் எங்களது வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. வயதான காலத்தில் எனது பாட்டி மட்டுமே எங்களுக்கு தற்காலிகமாக உதவி செய்து வருகிறார். எங்களின் நிலை கருதி எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும், இடிந்த வீட்டை கட்டித் தர அரசு உதவ வேண்டும் என உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User