ஜாபர் சாதிக்கை எதிர்த்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல்..

சட்டவிரோத பணபறிமாற்றமும் நடைபெற்றிருப்பதாக  குற்றம்சாட்டி, அமலாக்கத்துறையினர் ஜாபர் சாதிக், மற்றும் இயக்குநர் அமீருக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்தனர்.  

Apr 14, 2024 - 13:34
0 359
ஜாபர் சாதிக்கை எதிர்த்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில்  முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல்..

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள ஒரு குடோனில் இருந்து, போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி, கடந்த பிப்ரவரி மாதம் 15-ம்தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் விசாரணையில், இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட முன்னாள் திமுக நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மார்ச் 10ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து ஜாபர் சாதிக் கூட்டாளியான சதா என்ற சதானந்தத்தையும் கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ரூ. 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்தியது அம்பலமானது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 16ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு 5 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.தொடர்ந்து ஏப்ரல் 9ஆம் தேதி, இவ்வழக்கில் சட்டவிரோத பணபறிமாற்றமும் நடைபெற்றிருப்பதாக  குற்றம்சாட்டி, அமலாக்கத்துறையினர் ஜாபர் சாதிக், மற்றும் இயக்குநர் அமீருக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்தனர்.  இந்தநிலையில்  போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கு உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இதன் மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User