கர்நாடகாவை உலுக்கும் ஆபாச வீடியோ சர்ச்சை.. விசாரணைக்கு உத்தரவிட்ட சித்தராமையா.. வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய தேவகவுடா பேரன்?

Apr 28, 2024 - 14:02
0 587
கர்நாடகாவை உலுக்கும் ஆபாச வீடியோ சர்ச்சை.. விசாரணைக்கு உத்தரவிட்ட சித்தராமையா.. வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய தேவகவுடா பேரன்?

கர்நாடகாவையே அதிரவைத்துள்ள ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் ஹாசன் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடாகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன்கள் ரேவண்ணா, குமாரசாமி ஆகியோரைத் தொடர்ந்து, அவரது பேரன்கள் நிகில் குமாரசாமி, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோரும் அரசியலில் உள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, இம்முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இந்த நிலையில் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ சர்ச்சை, கர்நாடகாவையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. 300-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருப்பதாக கூறப்படும் ஆபாச வீடியோக்கள் காட்டுத்தீயாக பரவி வருகிறது. அதுவும் ஹாசன் தொகுதி வாக்குப் பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதிக்கு, முந்தைய நாளில் இருந்து இந்த வீடியோக்கள் அத்தொகுதி முழுவதும் வாட்ஸ் அப்களில் வந்து விழுந்தன. இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதனால் ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் நிலை குலைந்ததாக கூறப்படும் நிலையில், ஜேடிஎஸ் கட்சியின் தேர்தல் ஏஜெண்ட் பூர்ணசந்திரா தேஜஸ்வி போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், "நவீன் கவுடா என்பவர்தான் இத்தகைய ஆபாச வீடியோக்களை அனுப்பி வைக்கிறார். இவை அனைத்தும் போலியானவை, மார்பிங் செய்யப்பட்டவை. பிரஜ்வல் ரேவண்ணாவின் பெயரைக் கெடுக்கவே இத்தகைய போலி ஆபாச வீடியோக்களை பரப்பி விடுகின்றனர்" என கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக எஸ்.ஐ.டி. விசாரணை நடத்த முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 14 தொகுதிகளுக்குத்தான் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மீதமுள்ள 14 தொகுதிகளில் மே 7-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது. இந்த விவகாரம் தேர்தலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக தேவகவுடா குடும்பம், செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா, ஜெர்மனிக்கு தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User