சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானம் - தீட்சிதர்கள் உத்தரவாதம்

அறநிலையத்துறை ஆணையர் மனுவுக்கு பதிலளிக்கும்படி பொது தீட்சிதர்கள் உள்ளிட்டோருக்கு உத்தரவு

Dec 02, 2023 - 13:02
Updated: 3 years ago
0 264
சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டுமானம்  - தீட்சிதர்கள் உத்தரவாதம்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படாது என கோவில் தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலின் நான்கு கோபுரங்களும் அமைந்துள்ள பகுதியிலும்,கோவிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களிலும் எந்த அனுமதியுமின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும்,அதற்கு தடை விதிக்கக் கோரி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், கோவிலுக்குள் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு நீதிபதிகள், மகாதேவன் மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது,  பழமையான கோவில்களில் எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமானங்களை மேற்கொள்ள கூடாது என உயர் நீதிமன்றமே உத்தரவிட்டுள்ள போதும், அதை மீறி ஆறு அடிக்கு மேல் தோண்டப்பட்டுள்ளது. எந்த மாதிரியான பணிகள் நடக்கின்றன என்பதே தெரியவில்லை என்பதால் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, கோவிலுக்குள் எப்படி கட்டுமானங்கள் மேற்கொள்ள முடியும்? எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன? தேவைப்பட்டால் மாவட்ட நீதிபதியை நியமித்து அறிக்கை கோரப்படும் என தெரிவித்த நீதிபதிகள், எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப் படாது என்று உத்தரவாதம் அளிக்கிறீர்களா? அல்லது  தடை விதிக்கவா? என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

இதையடுத்து எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ள மாட்டோம் என்று தீட்சிதர்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதை அடுத்து, அறநிலையத்துறை ஆணையர் மனுவுக்கு பதிலளிக்கும்படி பொது தீட்சிதர்கள் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,விசாரணையை டிசம்பர் 6ஆம் தேதிக்கு  தள்ளிவைத்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 3
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User