மாணவிகளை "அட்ஜஸ்ட்" பண்ணச்சொன்ன நிர்மலா தேவி.. குற்றவாளி என தீர்ப்பளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் நீதிபதி

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிபதி அறிவித்துள்ளார். முருகன் கருப்பசாமி ஆகிய இரண்டு பேரை நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

Apr 29, 2024 - 14:30
0 496
மாணவிகளை "அட்ஜஸ்ட்" பண்ணச்சொன்ன நிர்மலா தேவி.. குற்றவாளி என தீர்ப்பளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் நீதிபதி

கடந்த 2018ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியர் ஆக இருந்த நிர்மலா தேவி என்பவர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேரம் பேசும் ஆடியோக்கள் வெளியாகி கடும் அதிர்வலைகளை உருவாக்கியது. 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செல்வாக்குடன் இருந்த பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகள் சிலருக்கு ஆசை வார்த்தை கூறி அவர்களை உயர்கல்வித்துறையில் செல்வாக்கு செலுத்துபவர்களுக்காக பாலியல் ரீதியாக பயன்படுத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. 

இது தொடர்பாக நிர்மலா தேவி பேசும் ஆடியோவை ரெக்கார்ட் செய்த மாணவிகள், பெற்றோர்கள் மூலம் கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். அதனை கல்லூரி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்ற புகார் எழுந்தது. இந்த நிலையில், அந்த ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. 

இதனையடுத்து 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை காமரஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரையும் போலீசார் கைது செய்து இருந்தனர். 

இந்த வழக்கில் ஆளுநர் மாளிகையில் தொடர்புடையவர்களின் பெயர்களும் அடிபட்டதால் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்தார். 

இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், விபச்சார தடுப்பு சட்டம், தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் பேராசிரியை நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதியப்பட்டன. 

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக நிர்மலா தேவி பேசிய மாணவிகளிடம் உயர் காவல் அதிகாரிகள் வாக்குமூலங்களை பெற்றனர். இதனிடையே குற்றம்சாட்டப்பட்ட நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். 

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்க வேண்டிய நிலையில் நிர்மலாதேவி  ஆஜராகாததால்  நீதிமன்றம் தீர்ப்பை இன்றைய தினம் (ஏப்ரல் 29) தள்ளி வைத்தார் நீதிபதி. நிர்மலா தேவி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் பேராசிரியர் நிர்மலாதேவி உட்பட 3 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். சுமார் ஆயிரத்துக்கு முன்னூருக்கு மேற்பட்ட பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் முருகன் கருப்பசாமி ஆகிய இரண்டு பேர் மீது காவல்துறை குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதன் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி பகவதி அம்மாள் அறிவித்தார். இந்த வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என அறிவித்து  தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

நிர்மலா தேவி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் உடனடியாக தண்டனையை அறிவிக்க கூடாது, தனது தரப்பு நியாயத்தை நீதிமன்றம் கேட்க வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி நிர்மலா தேவி வழக்கறிஞர் நீதிபதியிடம் கோரிக்கை வைத்து உள்ளார். இதனை தொடர்ந்து தண்டனை குறித்த விவரங்களை நீதிபதி பகவதியம்மாள் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User