Manjummal Boys: தமிழர்கள் கொண்டாடும் மஞ்சும்மல் பாய்ஸ்... இந்த வீக்கெண்டும் தியேட்டர்கள் ஃபுல்!!

மலையாளத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டிலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் 10 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mar 03, 2024 - 12:34
0 450
Manjummal Boys: தமிழர்கள் கொண்டாடும் மஞ்சும்மல் பாய்ஸ்... இந்த வீக்கெண்டும் தியேட்டர்கள் ஃபுல்!!

சென்னை: மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கடந்த மாதம் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிதம்பரம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி, காலித் ரஹ்மான், ‘கைதி’ புகழ் ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கொடைக்கானலில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து சர்வைவல் த்ரில்லர் மூவியாக வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. முக்கியமாக கேரளாவை விட தமிழ்நாட்டில் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இதற்கெல்லாம் ஒரே காரணம் குணா படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு’ என்ற பாடல் தான். சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த திரைப்படம் குணா. 1991ம் ஆண்டு வெளியான இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் தளபதி படத்துக்குப் போட்டியாக வெளியான குணா, விமர்சன ரீதியாக மட்டுமே வரவேற்பைப் பெற்றது. ஆனால், இப்போது குணா ரீ ரிலீஸாகுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஹிட் அடித்துள்ளது. 

குணா படத்தில் காதலுக்காக கம்போஸ் செய்யப்பட்ட ‘கண்மணி அன்போடு’ பாடலை, அப்படியே நண்பர்களுக்காக மாற்றியதோடு, அதனை விஷுவலாகவும் ட்ரீட் கொடுத்து அசத்தியிருந்தார் இயக்குநர் சிதம்பரம். ஒட்டுமொத்தமாக மஞ்சும்மல் பாய்ஸ் மேக்கிங் பாராட்டும்படி இருந்தாலும், ‘கண்மணி அன்போடு’ பாடல் ஒலிக்கும் அந்த ஓரிரு நிமிடங்களில் திரையரங்குகளில் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். படத்தின் திரைக்கதை குணா குகையின் பின்னணியில் உருவாகியுள்ளதும் மஞ்சும்மல் பாய்ஸ்க்கு தமிழ் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற காரணமாகியுள்ளது. 

இதனையடுத்து சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கான காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த வார விடுமுறைக்குப்பின் வெளியான போதும், வார நாட்களிலும் சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஆனது. இந்நிலையில் இன்றும் மாயாஜால், பி.வி.ஆர்களில் டிக்கெட்டுகள் அடுத்தடுத்து பதிவாகி ஹவுஸ்ஃபுல்லாகி வருகின்றன. மஞ்சும்மல் பாய்ஸின் முதல் நாள் வசூல் 3.3 கோடி ரூபாய் தான், ஆனால் நேற்று தமிழ்நாட்டில் மட்டுமே 5 கோடிக்கும் அதிகமாக கலெக்‌ஷன் செய்துள்ளது. அதேநேரம் கேரளாவில் நேற்று 2.5 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. அதேபோல் இரண்டவது சனிக்கிழமையான நேற்று வரை இந்தப் படம் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User