ஒளிந்துகொண்டிருந்தார் ஸ்டாலின்; திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை - இ.பி.எஸ். தாக்கு

தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் இந்த பிரச்சனையில் இருந்து நான் ஓடி ஒளிபவன் அல்ல. பொறுப்பை உணர்ந்த காரணத்தினால்தான் பொறுப்போடு பதிலளிக்கிறேன்.

Jun 21, 2024 - 20:59
Updated: 2 years ago
0 2.3
ஒளிந்துகொண்டிருந்தார் ஸ்டாலின்; திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை - இ.பி.எஸ். தாக்கு

சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டபோது அவையில் இல்லாமல் ஒளிந்துகொண்டிருந்த ஸ்டாலின், சபாநாயகர் எங்களை வெளியேற்றிய பிறகு வந்தார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபை இன்று 2வது நாளாக நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவுவிடம் அதிமுக, பாமக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு  சபாநாயகர் அப்பாவு, ''கேள்வி நேரம் முடிந்தவுடன்  கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி வழங்கப்படும்' என்று கூறினார். ஆனால் இதை ஏற்க மறுத்த அதிமுக, பாஜக, பாமக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அரசை கண்டிக்கும் பதாகையை கையில் ஏந்தி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால். சபாநாயகர் உத்தரவின்பேரில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதிலும் அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமாரை அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அவையில் இருந்து வெளியேற்றினார்கள்.

இதன்பிறகு கள்ளக்குறிச்சி உயிரிழப்பு விவகாரம் மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு விவரிக்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும் அவைக்குள் இருந்து தனது கருத்துகளை தெரிவித்திருக்கலாம். அரசியல் காரணங்களுக்காக எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்துவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் இந்த பிரச்சனையில் இருந்து நான் ஓடி ஒளிபவன் அல்ல. பொறுப்பை உணர்ந்த காரணத்தினால்தான் பொறுப்போடு பதிலளிக்கிறேன். குற்றவாளிகளை கைது செய்துவிட்டுதான் உங்களுக்கு பதிலளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ஸ்டாலினின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த விவாதம் நடத்தக்கோரி கழக சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டபோது அவையில் இல்லாமல் ஒளிந்துகொண்டிருந்த ஸ்டாலின், சபாநாயகர் எங்களை வலுக்கட்டாயமாக அராஜகப் போக்குடன் வெளியேற்றிய பிறகு வந்து, தான் "ஜனநாயக மாண்பு காப்பாளர்" என்று ஒரு நாடகமாடி, கள்ளச்சாராய மரணங்கள் குறித்த முற்றிலும் ஏற்கத்தகாத ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.

அஇஅதிமுகவினர் சபையில் இல்லாதபோது வந்து, தான் ஓடி ஒளியவில்லை என்று திமுக முதல்வர் சொல்வது நகைப்புக்குரியது.

சென்ற ஆண்டு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 23 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த பிறகாவது, இந்த விடியா திமுக அரசு கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று கள்ளக்குறிச்சியில் இச்சோகம் நிகழ்ந்திருக்காது. எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு பொறுப்பு திரு. ஸ்டாலின் தான். 

மூன்றாண்டுகள் கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, இப்போது வந்து "நான் அதிகாரிகளை மாற்றிவிட்டேன்" என்று சொல்வது பொறுப்பற்றத் தன்மையின் உச்சம். மக்கள் நலன் ஒன்றே அதிமுகவின் அரசியல் ஆதாயம். அந்த ஆதாயம் நிறைவேற நாங்கள் அனைத்து ஜனநாயக வழிகளிலும் போராடுவோம்.

18.02.2017 அன்று நீங்கள் சட்டப்பேரவையில் அரங்கேற்றிய அராஜகம், தமிழ்நாடு சட்டப்பேரவை கண்டிராத ஜனநாயகப் படுகொலை. ஜனநாயக மாண்பைப் பற்றி பேச திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை. நீங்கள் அதிகாரிகளை மாற்றவே 50 உயிர்கள் பலியாக வேண்டுமா? இப்போது நீங்கள் வாசிக்கும் பட்டியலால் போன 50 உயிர்கள் மீண்டும் வந்துவிடுமா? மனசாட்சி என்பது கொஞ்சமும் இருந்தால் பதவி விலகுங்கள்!” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 7
Dislike Dislike 10
Love Love 0
Funny Funny 8
Wow Wow 0
Sad Sad 3
Angry Angry 2

Comments (0)

User