கள்ளக்குறிச்சி எங்கும் மரண ஒலம்.. உயிருக்கு எமனாக மாறிய மெத்தனால்.. குடித்தால் என்ன நடக்கும்

அதிக அளவு மெத்தனால் மனித உடலுக்கு நுழைந்தவுடன் முதலில் உணவு மண்டலத்தை பாதிக்கும். இதனால் வயிறு பிரட்டுவது, வயிறு வலி, வாந்தி, குடல் குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும்.

Jun 20, 2024 - 15:41
0 284
கள்ளக்குறிச்சி எங்கும் மரண ஒலம்.. உயிருக்கு எமனாக மாறிய மெத்தனால்.. குடித்தால் என்ன நடக்கும்

கள்ளக்குறிச்சி: வீதிகள் தோறும் ஒப்பாரியும் அழுகுரலும் ஓயாது கேட்டுக்கொண்டிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் எங்கு திரும்பினாலும் மரண ஓலமாக இருக்கிறது இதற்குக் காரணம் விஷ சாராயம் குடித்தவர்களில் 37 பேர் உயிர் இழந்துள்ளனர்.  சாராய

ஜூன் 18-ம் தேதி இரவு 11 மணிக்கு பிரவீண் என்பவர விஷச்சாராயம் குடித்துள்ளார். அவருக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அப்போது உறவினர்கள் பிரவீணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

ஆனால் மது அருந்தி இருந்ததால் சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறி பிரவீணை வீட்டிற்கு மருத்துவர்கள் அனுப்பி உள்ளனர். ஜூன் 19 அதிகாலை 2 மணிக்கு பிரவீணின் உறவினர் சுரேஷ் என்பவரும் விஷச்சாராயம் குடித்துள்ளார். அவருக்கு அதிகாலை 4 மணியளவில் வயிறு வலி. பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. 

ஆனால் அரசு மருத்துவனையில் பிரவீணை அனுமதிக்க மறுத்ததால், சுரேஷை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி காலை 7 மணியளவில் சுரேஷ் உயிரிழந்துவிட்டார். இதனிடையே ஜூன் 19 காலை 6 மணிக்கு மீண்டும் பிரவீணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் காலை 8 மணியளவில் பிரவீணும் உயிரிழந்துவிட்டார். ஜூன் 19ம் தேதி காலை 10 மணிக்கு மேல் தான் இந்த தகவல் ஊடகங்களில் வெளியானது. பின்னர் மாவட்ட நிர்வாகத்திற்கும் இந்த தகவல் சென்றுள்ளது.  


விஷச்சாராயம் குடித்ததால் சுரேஷ் தான் முதலில் உயிரிழந்தார். அவரின் துக்க நிகழ்வுக்கு ஏராளமானோர் சென்ற நிலையில், அங்கும் விஷச்சாராயம் பாக்கெட்டில் விற்கப்பட்டதாகவும், அதனை துக்க நிகழ்வுக்கு சென்ற பலர் அருந்தியதாகவும் கூறப்படுகிறது. இதுதான் பலி எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. 

முதலிலேயே இந்த உயிரிழப்புக்கு காரணம் சாராயம் என்று கூறியிருந்தால், சாராயம் விற்பனையும் தடுக்கப்பட்டிருக்கும். இவ்வளவு பெரிய உயிரிழப்பும் ஏற்பட்டிருக்காது. இதனால் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி ஒரே குடும்பத்தில் 2 பேர், 3 பேர் என உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது.

விஷச்சாராயம் அருந்தியதாக 109 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 37 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலருக்கு கண் பார்வை பறிபோயுள்ளது. 

விஷச்சாராயத்தில் கலக்கப்படும் மெத்தனால் என்ற வேதிப்பொருள் மனித உயிர்களை பலிவாங்கியுள்ளது. விஷச்சாராயத்தை குடித்தவர்கள் துடி,துடித்து உயிரிழந்துள்ளனர்.37 பேரின்  உயிரை காவு வாங்கிய விஷச்சாரயத்தில் தடை செய்யப்பட்ட மெத்தனால் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது. மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய விஷமாகும். தொழிற்சாலைகளில் வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.  குறிப்பாக தொழிற்சாலைகளில் மெத்தனால் கிடைக்கும் என்பதை கள்ளச்சாராய வியாபாரிகள் தெரிந்து வைத்துக் கொள்வார்கள். அந்த வகையில்  தொழிற்சாலை நடத்துபவர்களிடம்  கள்ளச்சாராய வியாபாரிகள் கள்ளத்தனமாக மெத்தனாலை விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் பணம் கிடைக்கும். 

தடை செய்யப்பட்ட மெத்தனால் அதிகளவு போதை தரும். அதே நேரத்தில் மனித உயிரையே பறித்து விடும்,தொழிற்சாலைகளுக்கு வரும் மெத்தனாலில் 90 முதல் 100 சதவீதம் ஆல்கஹால் இருக்கும். அந்த மெத்தனாலை, நீர்த்துப் போகச் செய்யாமல் அப்படியே குடித்தால் ஓரிரு நிமிடங்களில் மரணம் ஏற்படும். விஷச்சாராயத்தில் கலக்கப்படும் மெத்தனால் மனித உடலுக்குள் சென்றதும் ஏற்படும் கொடூர மாற்றங்கள் என்ன என்பதை மருத்துவர்கள் விளக்கியுள்ளனர். 

வயிற்றுக்குள் விஷ சாராயம் சென்றவுடன் போதை அதிகமாகி மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றும். ஆனால் அடுத்த சில விநாடிகளில் வயிறும், குடலும் வெந்துவிடும். அதிக அளவு மெத்தனால் மனித உடலுக்கு நுழைந்தவுடன் முதலில் உணவு மண்டலத்தை பாதிக்கும். இதனால் வயிறு பிரட்டுவது, வயிறு வலி, வாந்தி, குடல் குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். தொடர்ந்து இது நரம்பு மண்டலத்தை சீர்குலைத்து விடும், இந்த சமயத்தில் தான் போதை ஏறியதாக குடிமகன்கள் மகிழ்ச்சியாக உணர்வார்கள். நரம்பு மண்டலம் சீர்குலை ஆரம்பித்தவுடன் நுரை நுரையாக வாந்தி எடுப்பார்கள், அந்த வாந்தி நுரையீரலுக்கு செல்ல ஆரம்பிக்கும் என்பதால், சற்று நேரத்தில் மூச்சு விட சிரமம் ஏற்படும்.

நரம்பு மண்டலம் வழியாக மூளை பாதிப்படைய துவங்கும், மூளை செல்கள் உடனடியாக செயல் இழக்கத்  துவங்கி விடும். அடுத்ததாக கண் பார்வை மங்குவது, காது கேட்காமல் போவது, இறுதியில் மயக்கமடைந்து விடுவார்கள். இது அனைத்தும் ஒரு சில நிமிடங்களிலே நடந்து விடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை உயிரிழந்த 37 பேருக்கும் இது போன்ற அறிகுறிகள் இருந்துள்ளது. சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 பேருக்கு கண் பார்வை பறிபோயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User