ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: ஹார்முஸ் ஜலசந்தி மூடல், பெட்ரோல்,டீசல் விலை ரூ.200 உயர வாய்ப்பு 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் ஈரானின் முக்கிய கடல் வழிப்பாதை முடக்கம் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, விலை ரூ.200 வரை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

Mar 02, 2026 - 06:57
0 361
ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: ஹார்முஸ் ஜலசந்தி மூடல், பெட்ரோல்,டீசல் விலை ரூ.200 உயர வாய்ப்பு 
பெட்ரோல்,டீசல் விலை ரூ.200 உயர வாய்ப்பு 

அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதலில், அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் முக்கிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்குப் பதிலடியாக உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) ஈரான் மூடுவதாக அறிவித்துள்ளது.

இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் 88 சதவீதத்தையும், இயற்கை எரிவாயுவில் 60 சதவீதத்தையும் சவூதி அரேபியா, கத்தார் போன்ற வளைகுடா நாடுகளில் இருந்து இந்த நீரிணை வழியாகவே இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு மிக முக்கியமான பாதை ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz). உலகின் 20 விழுக்காடு கச்சா எண்ணெய் இந்தப் பாதை வழியாகத்தான் பயணிக்கிறது. இந்தியாவின் 50 விழுக்காடு எண்ணெய் இறக்குமதி இந்த ஒரு குறுகிய கடல்வழியைச் சார்ந்தே உள்ளது. 

ஈரான் இந்த ஜலசந்தியை மூடினால் அல்லது போர் காரணமாகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், சவுதி அரேபியா, ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் விநியோகம் முற்றிலும் நின்றுவிடும். இது இந்தியாவில் கடுமையான எரிசக்தி தட்டுப்பாட்டை உருவாக்கும்.தற்போது இந்த வழித்தடம் மூடப்பட்டுள்ளதால், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு அதிகாரிகள், இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல், டீசல் அல்லது எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று உறுதியளித்துள்ளனர். அதற்கான முக்கிய காரணங்கள், இந்தியாவிடம் தற்போது 10 நாட்களுக்குத் தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளது. இவை தவிர, அவசர காலத்திற்காகச் சேமித்து வைக்கப்பட்டுள்ள எரிபொருளைக் கொண்டு மேலும் 5 முதல் 7 நாட்கள் வரை சமாளிக்க முடியும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை தற்போது பேரல் ஒன்றுக்கு 73 டாலரைத் தாண்டியுள்ளது. போர் தீவிரமடைந்து விநியோகச் சங்கிலி உடைந்தால், இது 110 டாலர் முதல் 130 டாலர் வரை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தியாவில் ஏற்கனவே எரிபொருள் விலைகள் அதிகமாக உள்ள நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்படும் இந்த விலை ஏற்றம், பெட்ரோல் விலையை 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. 

மேலும், ஹோர்முஸ் நீரிணை நீண்ட காலம் மூடப்பட்டிருக்கும் பட்சத்தில், வளைகுடா நாடுகளுக்கு மாற்றாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User