ககன்யான் திட்டத்திற்கான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி... 

Feb 21, 2024 - 20:02
0 221
ககன்யான் திட்டத்திற்கான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி... 

சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 வெற்றியை தொடர்ந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, அடுத்ததாக ககன்யான் திட்டத்தின் மீது கவனம் செலுத்தி வருகிறது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட பணியில் இஸ்ரோ தீவிரமாக உள்ளது . இந்த திட்டத்தின் மூலம் தரையில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரம் சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்துவர இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த ககன்யான் திட்டம் வரும் 2025-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. 

இந்த நிலையில் தமிழகத்தின் மகேந்திரகிரியில் ககன்யான் திட்டத்திற்காக கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்காக இஸ்ரோ, எல்விஎம்-3 ராக்கெட்டை தேர்ந்தெடுத்துள்ளது. சுமார் 8 டன் எடை கொண்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடிய திறன் படைத்த இந்த ராக்கெட் சந்திரயான்-3 திட்டத்திலும் பயன்படுத்தப்பட்டது. ககன்யான் திட்டத்திற்காக இந்த ராக்கெட்டில் இஸ்ரோ சில மாறுதல்களை செய்துள்ளது. இந்த ராக்கெட்டை உந்தி தள்ளும் கிரையோஜெனிக் எஞ்சின் சோதனையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ புராபல்ஷன் வளாகத்தில் உள்ள சோதனை மையத்தில் கடந்த 13ம் தேதி சிஇ20 கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை நடத்தப்பட்டது. இதில் இன்ஜினின் செயல்திறன், அதிகபட்ச தாக்குப்பிடிக்கும் திறன், உந்து சக்தி உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டன. இந்த சோதனை அனைத்தும் வெற்றிகரமாக முடிவுற்றிருக்கிறது. இந்த எஞ்சின் குறைந்தபட்சம் 6,350 நொடிகள் இயக்கப்பட வேண்டும். ஆனால் சோதனையில், 8,810 நொடிகளில் வெவ்வேறு காலநிலைகளில் சிறப்பாக இயங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User