அரசு ஊழியர்கள் பணியிட மாற்றம்:  "தண்டனையாக கருதக் கூடாது" - நீதிமன்றம் கருத்து...

Feb 28, 2024 - 17:48
0 2.8
அரசு ஊழியர்கள் பணியிட மாற்றம்:  "தண்டனையாக கருதக் கூடாது" - நீதிமன்றம் கருத்து...

அரசு ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்வதை தண்டனையாக கருதக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதுரையை சேர்ந்த ஜோசப் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கடந்த 25 ஆண்டுகளாக அரசுப் போக்குவரத்து கழக மதுரை மண்டலத்தில், ஓட்டுநராக பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அரசுப் போக்குவரத்து கழக மதுரை மண்டல பணிமனையில் இருந்து திருப்புவனம் போக்குவரத்து கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும், எந்த குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், தன்னை பணியிட மாற்றம் செய்துள்ளதாகவும், மூத்த அதிகாரி தன்னை காரணமின்றி இடமாற்றம் செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தன்னை மாற்றம் செய்துள்ள திருப்புவனம் கிளையில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை என்பதால், தனது பணியிட மாற்றத்தை ரத்து செய்து, மீண்டும் மதுரை அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி, போக்குவரத்து கழக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டதில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு தலைமை நீதிபதி கங்க பூர்வாலா மற்றும் நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஊழியரை இடமாற்றம் செய்யும் உத்தரவை தண்டனைக்குரியதாக பார்க்கக்கூடாது எனவும், அது சேவையின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். அதேபோல அனைத்து ஊழியர்களுக்கும் அடிப்படை வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் எனவும், மனுதாரர் அடிப்படை வசதிகள் இல்லாவிட்டால் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கலாம் என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 3
Wow Wow 0
Sad Sad 2
Angry Angry 0

Comments (0)

User