மீன்பிடி படகுகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மீனவர்களுக்கு உத்தரவு !

ஆய்வு நாளன்று படகுகளை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பின்னொரு நாளில் ஆய்வு செய்யக்கோரும் படகு உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது - மாவட்ட ஆட்சியர்

May 16, 2024 - 09:55
0 694
மீன்பிடி படகுகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மீனவர்களுக்கு உத்தரவு !

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மீன்பிடி படகுகள் ஆய்வு செய்யப்பட உள்ளதால் படகு உரிமையாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அறிவுறுத்தியுள்ளார். 

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983ன் கீழ் பதிவு செய்யப்பட்ட  மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடிக் கலன்கள் அனைத்தும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையரால் நியமிக்கப்படும் பணியாளர்களைக் கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், இந்தாண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகள் மே 28-ஆம் தேதியும், நாட்டுப்படகுகள் ஜூன் 13-ஆம் தேதியும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட உள்ளது. 

இந்நிலையில் மீனவர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதில், படகு உரிமையாளர்கள் படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் அட்டை, துறை மூலம் வழங்கப்பட்ட தொலைதொடர்பு கருவிகள் ஆகியவைகளை தயார் நிலையில் வைத்திருந்து, ஆய்வு செய்யும் நாளில் ஆய்வுக்குழுவிற்கு அனைத்து விவரங்களையும் அளித்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அனைத்து மீன்பிடிப் படகுகளுக்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக தெரிவிக்கப்பட்ட வர்ணம் பூசி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட எரியெண்ணெய் வாங்கும் படகுகள் நேரடி ஆய்வின் போது ஆய்விற்கு உட்படுத்தவில்லையெனில் அப்படகுகளுக்கு விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், அப்படகுகள் இயக்கத்தில் இல்லாததாக் கருதி அப்படகுகளின் பதிவு சான்றிதழை உரிய விசாரணைக்கு பின் ரத்து செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆய்வு நாளன்று படகுகளை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பின்னொரு நாளில் ஆய்வு செய்யக்கோரும் படகு உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது என அனைத்து படகு உரிமையாளர்களுக்கும் அச்செய்திக்குறிப்பின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அறிவுறுத்தியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 2
Angry Angry 0

Comments (0)

User