தலையங்கம்: வரிப் பணமும் 'வள்ளல்'களும்!

கல்வி, பசிப்பிணி போக்கத் தொடங்கிய நலத்திட்டங்கள் இன்று அரசியல் லாபத்திற்காக இலவசங்களாக மாறியுள்ளன. மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல், மாநில வளர்ச்சியைச் சிந்திக்கும் நேர்மையான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதே வாக்காளர்களின் கடமையாகும்.

Apr 15, 2026 - 12:04
0 589
தலையங்கம்: வரிப் பணமும் 'வள்ளல்'களும்!
தலையங்கம்

பெருந்தலைவர் காமராஜரின் அறிமுகம்தான் பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டம். இதையே சத்துணவுத் திட்டம் என்று விரிவுபடுத்தினார் எம்.ஜி.ஆர். வறுமையின் கொடுமையால் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் அவலத்தைத் தடுக்க உருவான திட்டங்கள் இவை. குழந்தைகளின் பள்ளி வருகை அதிகரித்தது.

இலவச சைக்கிள், இலவச லேப்டாப், இலவசப் பாடப் புத்தகங்கள் என்று அடுத்தடுத்து வந்த அரசுகள் திட்டம் கொண்டு வந்ததன் மூலம், ஏழைக் குடும்பங்களில் கல்விச் சுடரின் ஒளி மிகுந்தது.

கண்ணொளிக்கு, திருமணத்துக்கு என்று திட்டங்கள் விரிவடைந்ததும்கூட வரவேற்கக்கூடியது தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஏழை விவசாயிகளுக்கு மட்டும்தான் பயன்படு கிறதா என்ற விமர்சனம் எழுந்தது. இருப்பினும், திட்டத்தின் நோக்கத்தில் பழுதில்லை.

எப்போது இலவசத் தொலைக்காட்சிப் பெட்டித் திட்டம் வந்து ஓட்டுகளைக் குவித்ததோ.. அங்கிருந்துதான் 'அரசு' கஜானாவை பலி கொடுத்து 'அரசியல் லாபம்' தேடும் சுயநல நோக்கத்துக்கு விதை விழுந்தது. மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர் என வீட்டு உபயோகப் பொருள்களில் தங்கள் படத்தை அச்சிட்டுக் கொடுத்து, மக்களின் வரிப் பணத்தில் தங்களை வள்ளல்களாகக் காட்டிக்கொண்டதை மிகப் பெரிய அவலம் என்றுதான் சொல்ல வேண்டும்!

அதுவே வெவ்வேறு வடிவங்களில் ஏட்டிக்குப் போட்டியாக பல்கிப் பெருகி, அடிப்படையான அத்தனைத் தேவைகளுக்குமே தமிழக மக்கள் அரசின் இலவசங்களை நம்பித்தான் இருக்கிறார்கள் என்பது போன்ற அவமானகரமான ஒரு கறையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தக் கறையைத் துடைக்க வேண்டுமானால், வாக்காளர்கள் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டும். துட்டுக்கு ஓட்டு எவ்வளவு அசிங்கமோ, இலவசங்களை மட்டுமே மனதில் கொண்டு வாக்களிப்பதும் அவ்வளவு அசிங்கம்தான் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். இன்று ஆள்பவர்கள் -நேற்று ஆண்டவர்கள் இதுவரை ஆளாதவர்கள் ஆகியோரில், மாநிலத்தின் உண்மையான வளர்ச்சிக்குப் பயன்படக்கூடிய திட்டங்களை முன்வைத்து வாக்கு கேட்பவர்கள் யார் என்பதைப் பார்த்தே வாக்களிக்க வேண்டும்.

அறிவார்ந்த, தன்மானம் மிக்க, மாநில நலனில் அக்கறை கொண்ட குடிமக்களுக்கு அதுதான் அழகு.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User