தலையங்கம்: விலகும் ஜனநாயகம்!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 47 லட்சம் பேர் மீண்டும் பெயர் சேர்க்க முன்வராதது, தேர்தல் அரசியலில் மக்கள் கொண்டுள்ள அதீத நம்பிக்கையின்மையையும், ஜனநாயகத்தின் பெரும் பலவீனத்தையுமே காட்டுகிறது.

Feb 03, 2026 - 11:56
0 231
தலையங்கம்: விலகும் ஜனநாயகம்!
தலையங்கம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.) ஒரு நிர்வாக நடவடிக்கையாகத் தொடங்கப்பட்டது. வீடு வீடாகச் சென்று படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்தால் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சுமார் 40 நாட்கள் நடந்த இந்தப் பணி டிசம்பர் 14-ம் தேதி நிறைவடைந்தது.

இந்தப் பணியின் அடிப்படையில், தமிழகத்தில் 97 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதில், இடம் பெயர்ந்தோர் அல்லது குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் எனக் கூறி நீக்கப்பட்ட 66 லட்சம் பேர் மீண்டும் சேர்த்துக்கொள்வதற்காக விண்ணப்பம் அளிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதற்கென சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.

இருப்பினும், விண்ணப்பம் அளித்திருப்பவர்கள் 19.5 லட்சம் பேர் மட்டுமே. மீதமுள்ள 47 லட்சம் வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சேர்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை. இந்த எண்ணிக்கை பேரதிர்ச்சியை கொடுக்கிறது.

ஜனநாயகத்தில் ‘நோட்டா’ என்ற தேர்வு இருக்கிறது. எந்த அரசியல் கட்சியும் பிடிக்கவில்லை, எந்த வேட்பாளரும் பிடிக்கவில்லை என்றாலும், தேர்தலில் பங்கேற்று தன் கருத்தைப் பதிவு செய்யும் உரிமை அது. ஆனால் இங்கே நடப்பது அதைவிடவும் ஆழமான நிராகரிப்பு. “எனக்கு தேர்தலே வேண்டாம்” என்ற மனநிலைக்கு கிட்டத்தட்ட அரை கோடி மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

இது மக்கள் அலட்சியமா, அரசியல் மீது ஏற்பட்ட நம்பிக்கை இழப்பா, அல்லது தேர்தல் செயல்முறைகளில் உள்ள விழிப்பு உணர்வு குறைபாடா என்ற கேள்வி எழுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும், விளைவு ஒன்றே… அது, ஜனநாயகத்தின் அடிப்படை பலவீனமடைகிறது!

பெயர்கள் நீக்கப்படுவது ஒரு நிர்வாகச் செயல்; ஆனால், மக்களின் மௌனம் நீடித்தால்… அது ஜனநாயகத்தின் மரண அறிக்கை!

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User