எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

போதுமான ஆதாரங்களுடன் ஜனவரி 30ம் தேதி மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும்

Jan 05, 2024 - 16:56
Updated: 3 years ago
0 175
எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி ஜனவரி 30ம் தேதி சாட்சியம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி, 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், பாதுகாப்பு காரணமாக தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்ததோடு, அவரது வீட்டில் சாட்சியம் அளிக்க ஏதுவாக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு, சட்டம் இங்கே அனைவருக்கும் சமமானது. அதை யாருக்காகவும் மாற்றமுடியாது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். பாதுகாப்பு என்ற ஒற்றை காரணத்திற்காக மட்டும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு அளிக்க முடியாது. உயர்நீதிமன்றம் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் செயல்பட்டு வருகிறது.அதனால், எந்த பயமும் இன்றி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தும் படி அவரது தரப்பு வழக்கறிஞருக்கு ஏற்கனவே உத்தரவிட்டனர். 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜனவரி 05) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதி நியமித்த சிறப்பு வழக்கறிஞர் சாட்சியம் பதிவு செய்து விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்காத நீதிபதிகள், போதுமான ஆதாரங்களுடன் ஜனவரி 30ம் தேதி மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். 
  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User