முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து விமர்சனம்- அதிமுக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்

கைதாகி சிறையில் இருந்தபோது திருந்தியிருப்பார் என்றும், குடும்பத்தினர் உள்ளிட்ட அனைத்து மனித உயிர்களையும் மதிப்பார் என்றும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Nov 18, 2023 - 16:48
Updated: 3 years ago
0 3.2
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து விமர்சனம்- அதிமுக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்

முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த பொள்ளாச்சி அதிமுக நிர்வாகி அருண்குமார் மன்னிப்பு கேட்பது கண்துடைப்பாக இருக்கலாம் என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவர் தவறை மீண்டும் செய்யப்போவதில்லை என உணர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

மதுபானங்கள் விலை உயர்வை கண்டித்து தலையில் மதுபாட்டிலை வைத்துக்கொண்டு மதுக்குடிப்பவர் ஒருவர், தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும்  அவதூறான வார்த்தைகளால் விமர்சிக்கும் வீடியோவை, பொள்ளாச்சி அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி அருண்குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதுதொடர்பாக பொள்ளாச்சி திமுக வழக்கறிஞர் அணியினர் அளித்த புகாரில், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அருண்குமார் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த அக்டோபர் 5ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், ஜாமீன் கோரி அருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சமூக வளைதளத்தில் பரவிய வீடியோவை தான் ஃபார்வர்டு மட்டுமே செய்ததாகவும், எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் அரசியல் உள்நோக்கத்துடன் காவல்துறையினர் தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், மனுதாரர் மன்னிப்பு கோர வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், வெறும் கண்துடைப்புக்காக மட்டுமே மன்னிப்பு கேட்கலாம் என கருதுவதாக தெரிவித்தார்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடப்போவதில்லை என மனுதாரர் இதயப்பூர்வமாக உணர வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, கைதாகி சிறையில் இருந்தபோது திருந்தியிருப்பார் என்றும், குடும்பத்தினர் உள்ளிட்ட அனைத்து மனித உயிர்களையும் மதிப்பார் என்றும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

பின், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் தினமும் காலை ஆஜராகி  கையெழுத்திட வேண்டும், ஆதாரங்களை அழிக்ககூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அருண்குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User