கிரிக்கெட் வீரர் தோனி ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் தொடர்புடைய  சிடி-யை எழுத்து வடிவமாக்குவதற்கான கட்டணமாக, 10 லட்சம் ரூபாயை, மார்ச் 12 ம் தேதிக்குள்  செலுத்தும்படி, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Feb 12, 2026 - 06:50
0 359
கிரிக்கெட் வீரர் தோனி ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கிரிக்கெட் வீரர் தோனி ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும்

கடந்த 2013 ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில், சென்னை அணி வீரர் மகேந்திர சிங் தோனிக்கும் தொடர்பு இருப்பதாக, ஓய்வுப் பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். 

இது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, நூறு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

கடந்த 2014 ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்புடைய சிடி-யை எழுத்து வடிவமாக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, வழக்கு தொடர்பான சிடி-யை எழுத்துவடிவமாக்க  மொழி பெயர்ப்பாளரும், தட்டச்சரும் முழு நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. இதற்கு மூன்று முதல் நான்கு மாதங்களாகும். மொழியாக்கம் செய்யப்படும் ஆவணங்களை நகல் எடுக்க கூடுதல் செலவினம் ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், மொழியாக்கத்துக்கான கட்டணமாக 10 லட்சம் ரூபாயை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு மார்ச் 12 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என மனுதாரரான தோனிக்கு உத்தரவிட்ட நீதிபதி, மொழியாக்க பணிகளை மார்ச் 3 வது வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என மொழிபெயர்ப்பாளர், தட்டச்சருக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 12 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User