விபத்தில் மூளைச்சாவு.. 11 பேரின் உயிரை காத்த தஞ்சை ஜேம்ஸ்.. அரசு மரியாதை செய்த கோட்டாட்சியர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவரின் கண், இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட 11 உடல் உறுப்புகளை அவரது மனைவி தானம் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

May 02, 2024 - 14:49
0 183
விபத்தில் மூளைச்சாவு..  11 பேரின் உயிரை காத்த தஞ்சை ஜேம்ஸ்.. அரசு மரியாதை செய்த கோட்டாட்சியர்

தஞ்சையை அடுத்த வல்லம் பெரியார் நகரை சேர்ந்தவர்கள் விஜயன், ஜேம்ஸ். பெண்டர்களான இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலையை முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளனர்.

திருக்கானூர்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதியதால் விஜயன், ஜேம்ஸ் உட்பட மற்றொரு வாகனத்தில் வந்த நபர் என 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் விஜயன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த ஜேம்ஸ் உள்பட இரண்டு பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் ஜேம்ஸ் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அவரது மனைவி கில்டாவிடம் தெரிவித்து உடல் உறுப்புகள் தானம் செய்வது குறித்து எடுத்து கூறினர்.

தனது கணவரின் உடல் உறுப்புகள் பலரை வாழ வைக்கும் என்று எண்ணிய கில்டா, ஜேம்ஸின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார். இதனை அடுத்து ஜேம்ஸின் இதயம், கண்கள், சிறுநீரகம் உள்பட 11 உடல் உறுப்புகள் தஞ்சை மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

ஜேம்ஸின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதையடுத்து அவரது உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. இதில் மருத்துவமனை முதல்வர், கோட்டாட்சியர் உள்பட மருத்துவர்கள் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். மறைந்தும் பலரது வாழ்க்கைக்கு ஒளியூட்டியுள்ளார் ஜேம்ஸ்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User