அரை நிர்வாணமாக்கி தாக்குதல்.. பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கைது.. சென்னை போலீஸ் அதிரடி..

May 03, 2024 - 19:57
0 269
அரை நிர்வாணமாக்கி தாக்குதல்.. பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கைது.. சென்னை போலீஸ் அதிரடி..

சென்னையில் காரில் சென்ற நபரை அரை நிர்வாணமாக்கி விரட்டி விரட்டி தாக்கிய  வழக்கில்  பாஜக நிர்வாகி உட்பட  3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை மிண்ட் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் நேற்று (மே-2) தனது மனைவியுடன் காரில் தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டினப்பாக்கம் சிக்னல் அருகே முன்புறம்  காரில் சென்ற  நபர்கள் நீண்ட நேரமாக வழிவிடாமல் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மணிவண்ணன் ஹாரன் அடித்து வழி விடுமாறு கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் மதுபோதையில் மணிவண்ணனை ஆபாசமாக பேசியும் சட்டையை கிழித்தும் விரட்டி விரட்டி தாக்குதல் நடத்தினர். மேலும், தடுக்க முயன்ற போக்குவரத்து காவலர்களை ஒருமையில் பேசியும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.  இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவம் தொடர்பாக  மணிவண்ணன் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து காரின் பதிவு எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் தாக்குதல் நடத்தியது தொடர்பாக திருவொற்றியூரை சேர்ந்த கோபி,  சுடலையாண்டி மற்றும் அவரது மகன் கார்த்திக் ராஜா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கோபி ஆயுதப்படை காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என கூறப்படுகிறது. இதேபோல கார்த்திக் ராஜா, திருவொற்றியூர் கிழக்கு பகுதி பாஜக பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார்.

இதையடுத்து 3 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாக்குதல், காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல்  உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User